SKIP TO MAIN CONTENT

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்!

அதிதீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதும் எதுவும் பலனின்றி அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது

SPB
Source: Public domain

2 min read

Published


Skip to article content

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் அவர் கொரோனாவில் இருந்து மீண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு அதிதீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதும் எதுவும் பலனின்றி அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தேறிவிட்டார் என்ற மகிழ்ச்சியிலிருந்த அவரது ரசிகர்களும், திரையுலகினரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஜூன் 4, 1946ம் ஆண்டு, ஆந்திரப் பிரதேசம், நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தார்.

1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடத் தொடங்கியது முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர், பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர்.

கர்னாடக சங்கீதம் கற்காமலே இசையில் சாதனைகள் நிகழ்த்திய, பொறியியல் படித்த இவருக்கு எல்லாமே கேள்வி ஞானம்தான். மெல்லிசைக் கச்சேரிகளில் பாடுவதையும் பாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வாங்கிக் குவிப்பதையும் ஆர்வத்தோடு செய்தவர். அவைதான் அவருக்கு எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வர ராவுக்குப் பாடும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தது.

இவர் தமிழில் முதலில்  ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர்௭ம்.௭ஸ்.வி இசையில் எல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார். ௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை. அடுத்ததாக சாந்தி நிலையம் படத்தில் வரும் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலைப் பாடினார் . ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்தது.

ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷண் விருதும் வழங்கியது. இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.

பாலசுப்ரமணியம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி, இவருக்கு பல்லவி, சரண் ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now