ஆஸ்திரேலியா உட்பட 48 நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த கட்டணமின்றி விசா வழங்கும் நடைமுறை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக இலங்கை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதல் 48 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை செல்வதற்கு வழங்கப்பட்ட இலவச விசா நடைமுறை இம்மாத இறுதியுடன் முடிவுக்குவரும் நிலையில், இதனை மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, டென்மார்க், நோர்வே, சுவீடன், ஐக்கிய இரச்சியம், கனடா, சீனா, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, ஜேர்மன், பிரான்ஸ், சுவிஸ் உட்பட 48 நாடுகளுக்கு இந்த இலவச விசா வசதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதற்கான அமைச்சரவை பத்திரத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஈஸ்டர் குண்டுவெடிப்பினையடுத்து நலிவடைந்த இலங்கையின் சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்பும்நோக்கில் இந்நடைமுறை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
விசாவுக்குரிய கட்டணம் விலக்கப்பட்டுள்ளதே தவிர சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்குள் நுழைவதற்கான விசாவை விமானநிலையத்தில் வைத்தோ அல்லது அதற்கு முன்னதாக http://www.eta.gov.lk/slvisa/ என்ற இணையத்தளமூடாகவோ பெற்றுக்கொள்ளவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
