ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்த இலங்கை பின்னணி கொண்ட ஆகக்குறைந்தது 12 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் பேர்த் வழியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்டுள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் எனவும் ஒருவர் சிங்களவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பி அனுப்பபட்டவர்கள் அனைவரும் கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து பொலீஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர் என்று ஆஸ்திரேலிய தகவல்களை மேற்கோள்காட்டி The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தேடி வந்து சுமார் ஐந்து ஆறு வருடங்களாக இங்கு வாழ்ந்து வந்தவர்கள் என்றும் இவர்களது புகலிடக்கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும்போது அகதிகள் நல அமைப்புக்கள் விமானங்களுக்குள் ஆர்ப்பாட்டம் செய்து அவர்களது பயணத்தை தடுத்து நிறுத்தும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் - இம்முறை மேற்படி புகலிடக்கோரிக்கையாளர்கள் நாட்டின் பல பாகங்களிலுள்ள தடுப்பு முகாம்களிலிருந்து பேர்த் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இரகசியமாக விசேட விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.
இந்த பிரத்தியேக நடவடிக்கைக்காக ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சு Skytraders விமான நிறுவனத்திடம் அண்மையில் 63 மில்லியன் டொலர் பெறுமதியான போக்குவரத்து ஒப்பந்தத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருப்பி அனுப்பப்பட்டுள்ளவர்களில் பலர் இலங்கையில் பாதுகாப்பு படையினரால் முன்னர் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள், அவர்களது பாதுகாப்புக்கு இன்னமும் அங்கு மிகுந்த அச்சுறுத்தல் நிலவுகிறது என்று The Guardian தெரிவித்துள்ளது.
Share
