2017 ஆம் ஆண்டில், முகமது மன்சூர் என்பவர் அடிலெய்ட் நகரில் பென்ஃபீல்ட் கார்டன்ஸ் (Penfield Gardens) என்ற இடத்திலுள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.
வேறு மூன்று பேர் தான் கொலை செய்தார்கள் என்று, அவரைக் கொலை செய்தவர் காவல்துறையிடம் முறையிட்டார். காவல்துறையும் அந்த மூன்று பேரைக் கைது செய்து ஒரு மாதம் சிறையில் வைத்திருந்த பின்னர் தான் உண்மையான குற்றவாளி இவர் என்று தெரிய வந்தது.
44 வயதான கணேஷமூர்த்தி தியாகராஜா என்பவர் தான் இந்தக் கொலையாளி. தெற்கு ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்ற விசாரணை முடிவில், 23 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அது முடிந்த பின் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்வார் எனவும் தீர்ப்பளித்துள்ளது.
இலங்கையில் சிறு வயதில் போராளியாக இருந்த கணேஷமூர்த்தி தியாகராஜா, இராணுவத்தின் பிடியில் சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார். படகு மூலம் ஆஸ்திரேலியா வந்த இவருக்கு இலங்கையில் மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள்.
கொலை நடந்த நேரம் கணேஷமூர்த்தி தியாகராஜா குடி போதையில் இருந்தார் என்றும், மிக விரைவாகவும் கொடூரமாகவும் முகமது மன்சூரை இவர் தாக்கினார் என்றும், வேலை முடிந்த பின்னர் இருவரும் நட்பு ரீதியாகப் பேசிக் கொண்டு குடித்துக் கொண்டிருந்தமையால், அபாயகரமான தாக்குதலுக்கு சற்று முன்பு என்ன நடந்தது தன்னால் தீர்மானிக்க முடியவில்லை என்றும் விசாரணையை முன்னெடுத்த நீதிபதி டேவிட் லோவெல் (Justice David Lovell) நேற்றைய தீர்ப்பில் கூறினார்.
"நீங்கள் அவரை முதுக்குப் பின்னால் அல்லது குறைந்த பட்சம் அவரது பக்கத்திலிருந்து தாக்கியதாக நான் கருதுகிறேன்.... அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வாய்ப்பே இருக்கவில்லை" என்று நீதிபதி லோவெல் கூறினார்.
"உங்களுக்கு ஆதரவளித்த ஒரு மனிதர் மீது நீங்கள் நடத்திய தாக்குதல் மிகவும் கொடூரமானது." என்று நீதிபதி மேலும் சொன்னார்.
தாக்குதலுக்குப் பின்னர், கணேஷமூர்த்தி தியாகராஜா ஒரு நாடகம் ஒன்றை நடத்தியுள்ளார். முகமது மன்சூரின் மரணத்திற்கு மூன்று பேர் காரணம் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டி, காவல்துறையிடம் முறையீடு செய்தார். காவல்துறையும் அந்த மூன்று பேரை கிட்டத்தட்ட ஒரு மாதம் சிறையில் வைத்திருந்தது. ஆனால், காவல்துறையின் விசாரணையில், கணேஷமூர்த்தி தியாகராஜா தான் கொலை செய்தவர் என்பது தெரிய வந்தது. அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டார், ஆனால் பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கு என்ன காரணம் என்று தொடர்ந்து பொய் சொன்னார்.
"உங்களது கற்பனையான, மற்றும் நம்ப முடியாத சில பகுதிகளை - பொறுப்பைத் தவிர்க்க நீங்கள் கூறிய அபத்தமான கதையை நான் நிராகரிக்கிறேன்" என்று கூறிய நீதிபதி, "நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கையில், நடந்த சம்பவத்தின் பின்னணியில், அந்த வருத்தத்தைப் பார்க்க வேண்டும், உங்கள் செயலின் விளைவுகளை, அவரது குடும்பத்தினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டியிருக்கும்" என்றும் கூறினார்.
கணேஷமூர்த்தி தியாகராஜா ஆஸ்திரேலிய குடிமகன் அல்லாத காரணத்தால், சிறைத் தண்டனை முடிவில் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்.