SKIP TO MAIN CONTENT

நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி! இலங்கையின் புதிய அதிபராகிறார் ரணில்!!

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Sri Lanka's Ranil Wickremesinghe
Sri Lanka's new President - Ranil Wickremesinghe Source: AAP

2 min read

Published


Skip to article content

நாடாளுமன்ற தீர்மானம் மூலம் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கு நடத்தப்பட்ட வாக்களிப்பில் 134 என்ற அதிகூடிய வாக்குகளைப்பெற்று ரணில் விக்கிரமசிங்க புதிய அதிபராகிறார்.

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ தனது பதவியிலிருந்து விலகியதையடுத்து புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு வாக்கெடுப்புக்கான சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டநிலையில், பதில் அதிபராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க, டளஸ் அழகபெரும மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் அதிபர் பதவிக்காக போட்டியிட்டனர்.

இன்றைய ரகசிய வாக்கெடுப்பின் தெரிவத்தாட்சி அதிகாரியாக நாடாளுமன்ற   பொதுச் செயலாளர்  தம்மிக்க தஸநாயக்க செயற்பட்டார்.

வாக்கெடுப்பைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெண்ணும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென டளஸ் அழகபெரும, டிலான் பெரேராவையும், ரணில் விக்ரமசிங்க, ஹரின் பெர்ணான்டோவையும், அநுர குமார திஸாநாயக்க, விஜித்த ஹேரத்தையும் தமது பிரதிநிதிகளாக நியமித்திருந்தனர்.

பரபரப்பாக இடம்பெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 134 வாக்குகள் கிடைத்த அதேநேரம் டளஸ் அழகபெருமவுக்கு 82 வாக்குகளும், அநுர குமார திஸாநாயக்கவுக்கு 3 வாக்குகளும் கிடைத்துள்ளன. நான்கு வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் 52 மேலதிக வாக்குகளால் ரணில் விக்ரமசிங்க இலங்கையின்

8வது நிறைவேற்று அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வாக்கெடுப்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரை தவிர, ஏனைய 223 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்ட அதேநேரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சில உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி என முக்கிய கட்சிகள் டளஸ் அழகபெருமவிற்கு ஆதரவை வழங்கியிருந்தன.

இலங்கையின் வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் ஒருவர், நாடாளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதல்முறையாகும்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now