சிட்னியில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த Black Lives Matter ஆர்ப்பாட்டத்தை நிறுத்தக்கோரி பொலீஸார் தாக்கல் செய்த வழக்கிற்கு சார்பாக நியூ சவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளபோதும் திட்டமிட்டபடி தங்களது ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று Black Lives Matter ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று தேசிய ரீதியில் பேரிடரை ஏற்படுத்தியுள்ள தற்போதைய காலகட்டத்தில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு முரணான எவ்வகையான மக்கள் ஒன்றுகூடலையும் அனுமதிக்கமுடியாது என்றும் அதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டத்தினை தடைசெய்யுமாறும் பொலீஸார் தாக்கல் செய்த வழக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் விசாரைணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்மீதான தீர்ப்பினை வழங்கிய நீதிபதி, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான தடையை விதித்திருந்தார்.
ஆனால், தடையை மீறி நாளை Black Lives Matter ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் 2015 ஆம் ஆண்டு பொலீஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்த 26 வயது பூர்வகுடி இளைஞன் David Dungay Junior-இன் மரணத்துக்கு நீதிகோரும் நடைபயணம் சிட்னி மார்ட்டின் சதுக்கத்தில் ஆரம்பித்து நியூசவுத் வேல்ஸ் நாடாளுமன்றம் வரைக்கும் சென்று அங்கு மனு கையளிக்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
அதேநேரம் David Dungay Junior-இன் மரணம் குறித்த விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கான உறுதிமொழி வழங்கப்பட்டால் நாளைய ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதற்குத் தயார் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தடையை மீறி ஒன்றுகூடுபவர்களுக்கு தற்போது மாநிலத்தில் நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி பாரதூரமான அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் சட்டத்தை மீறுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் பொலீஸார் அறிவித்துள்ளனர்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
