போதைப்பொருள் கடத்திய வழக்கில் மலேசியாவில் மரணதண்டனையை எதிர்கொண்டிருந்த ஆஸ்திரேலியப் பெண் Maria Exposto அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு விரைவில் நாடுதிரும்பவுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயான Maria Elvira Pinto Exposto, ஒரு கிலோவுக்கும் மேற்பட்ட methamphetamine போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் நடந்த வழக்கு விசாரணையின் போது, இணையம் மூலம் அறிமுகமான ஆண் நண்பர் ஒருவரால் ஏமாற்றப்பட்டு Maria Exposto-க்கே தெரியாமல் அவரது பயணப்பையில் போதைப்பொருள் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து Maria Exposto குற்றமற்றவர் எனக் கருதிய மலேசிய உயர் நீதிமன்றம் 2017 டிசம்பரில் அவரை இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்திருந்தது.
எனினும் இதை எதிர்த்து அரச தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின்கீழ் குறித்த பெண்ணுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்தப்பின்னணியில் மரணதண்டனை தீர்ப்புக்கெதிராக Maria Exposto தாக்கல் செய்த மனுவை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட குழு அவரை போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து கடந்த 5 வருடங்களாக சிறைவைக்கப்பட்டிருந்த Maria Exposto விரைவில் ஆஸ்திரேலியா திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
