சிட்னியின் மாபெரும் புதுவருட வாணவேடிக்கை நிகழ்வு-Fireworks திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நிலவும் காலநிலை நெருக்கடியைக் கருத்திற்கொண்டு இந்நிகழ்வை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுப்பெற்றிருந்த பின்னணியில், வழமைபோல மிகப்பெரியளவில் இவ்வாணவேடிக்கையை நடத்துவதற்கு நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் தயாராகி வருவதாக குறிப்பிடப்படுகிறது.
புதுவருட தினத்தன்று catastrophic-பேரழிவை ஏற்படுத்தக்கூடிய காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டால் மாத்திரமே வாணவேடிக்கையை நடத்துவதற்கு தடைவிதிக்கப்படும் எனவும், ஆனால் தற்போதைய நிலவரப்படி அத்தகைய சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அரிதாகவே காணப்படுவதாகவும் Rural Fire Service தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு திங்கட்கிழமை வெளியிடப்படுமென Rural Fire Service குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தை சூழ எரிந்துகொண்டிருக்கும் காட்டுத்தீ காரணமாக புதுவருட வாணவேடிக்கை நிகழ்வை ரத்துச்செய்யக்கோரி நடப்பட்ட மாபெரும் கையெழுத்து வேட்டையில் சுமார் இரண்டரை லட்சம் பேர் பங்கேற்றிருந்தனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாநில வானத்தில் ஏற்கனவே போதுமானவு புகைமண்டலம் நிறைந்துபோயிருக்கிறது, வாணவேடிக்கை நடத்தி அதன் ஊடாகவும் வளிமண்டலத்தை மாசுபடுத்த தேவையில்லை-என்று இந்த கையெழுத்து வேட்டையை ஆரம்பித்தவர்கள் தெரிவித்திருந்ததுடன், இந்த நிகழ்வுக்கு ஒதுக்கப்படும் நிதியை காட்டுத்தீயை நிறுத்துவதற்கு பாடுபடுகின்ற தீயணைப்புப்படை வீரர்களுக்கும் காட்டுத்தீயிலிருந்து வனவிலங்குகளை பாதுகாப்பதற்கு பாடுபட்டுக்கொண்டுள்ள விலங்குகள் நல அமைப்பினருக்கும் கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் புதுவருட வாணவேடிக்கையை நடத்துவதற்கான பணிகள் 15 மாதங்களுக்கு முன்னரேயே ஆரம்பித்துவிடுவதாகவும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு 130 மில்லியன் டொலர் வருவாயை ஈட்டித்தரும் இந்நிகழ்வை ரத்துச் செய்வது இயலாத காரியம் எனவும் City of Sydney தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டும் சிட்னி புதுவருட வாணவேடிக்கை நிகழ்வைப் பார்வையிடுவதற்கென சுமார் 1 மில்லியன் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
