சிட்னியின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில், sewage-கழிவுநீரில் கொரோனா வைரஸின் தடயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் வாழ்பவர்கள் தம்மை கோவிட் சோதனைக்கு உட்படுத்திக்கொள்வது அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அங்குள்ள இந்திய சமூகத்தவர்கள் அதிகளவில் தம்மை சோதனைக்குட்படுத்த முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 3 லட்சம் பேரை உள்ளடக்கிய வடமேற்கு மற்றும் தென்மேற்கு சிட்னியில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளை சோதனை செய்ததில் கொரோனா வைரஸின் தடயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இங்கு வாழ்பவர்களில் எவருக்கேனும் சிறியளவு அறிகுறி தோன்றினால்கூட தம்மை சோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதையடுத்து Leppington, Catherine Field, Gledswood Hills, Varroville, Denham Court, West Hoxton, Hoxton Park, Middleton Grange, Horningsea Park, Carnes Hill, Edmondson Park, Prestons, Miller, Quakers Hill, Castle Hill, Annangrove, Kellyville, Box Hill, Kenthurst, Glenhaven, The Ponds, Rouse Hill, North Kellyville, Kellyville Ridge, Beaumont Hills, Stanhope Gardens, Baulkham Hills, Glenwood, Bella Vista, Parklea, Acacia Gardens, Norwest போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் சென்று கோவிட் சோதனையை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுஒருபுறமிருக்க நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தொடர்ந்து 8 நாட்களாக சமூக பரவல் ஊடாக எவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
