SKIP TO MAIN CONTENT

தாஜ்சமுத்ரா குண்டுதாரி மெல்பேர்னிலிருந்தபோது பொலீஸாரினால் விசாரிக்கப்பட்டவர்!

IS release picture of Sri Lanka suicide attackers
IS release picture of Sri Lanka suicide attackers Source: Amaq

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

மிகவும் அமைதியான சுபாவமுடைய தனது சகோதரர் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தது முதல் பல மாற்றங்களுடன் காணப்பட்டார் என்றும் ஆஸ்திரேலியாவில்தான் அவருக்கு ஏதோ இடம்பெற்றிருக்கவேண்டும் என்றும் கொழும்பில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களில் ஒன்றில் வெடித்துச்சிதறிய தற்கொலைக்குண்டுதாரி ஒருவரின் சகோதரி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, குறிப்பிட்ட தற்கொலைக்குண்டுதாரியான அப்துல் லத்தீல் ஜமீல் மொஹமட் மெல்பேர்னில் தங்கியிருந்து கல்வி கற்ற காலப்பகுதியில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்துக்கான ஆட்சேர்க்கும் முகவர் என்று கருதப்படும் நீல் பிரகாஷசுடனான தொடர்பு குறித்து ஆஸ்திரேலிய பங்கரவாத தடுப்பு பிரிவினரால் 2014 ஆம் ஆண்டு விசாரிக்கப்பட்டார் என்றும் "The Australian" தெரிவித்துள்ளது.

அதேநேரம் அவர் குறித்த மேலதிக தகவல்களை Daily Mail ஊடகம் தெரிவித்தபோது -

கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலுக்கு சென்று தன்னை வெடிக்க வைக்கமுயற்சித்தபோது அது தவறிப்போக தெஹிவலவில் உள்ள வீடொன்றுக்கு வந்து தற்கொலை அங்கியை கழற்றியபோது வெடித்து சிதறியவர் என்று கருதப்படும் அப்துல் லத்தீவ் ஜமீல் மொஹமட் (வயது 37) குறித்து அவரது சகோதரி தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தேயிலை வியாபாரியான தகப்பனுக்கு ஆறு குழந்தைகளில் ஒருவராக 82 ஆம் ஆண்டு பிறந்த லத்தீப் சிறுவயதிலிந்து படிப்பில் சுட்டி. சொந்த ஊரான கண்டியில் சர்வதேச பாடசாலையில் கல்விகற்று பின்னர் சர்வதேச பாடசாலையிலேயே உயர்கல்வியை கற்றிருக்கிறார். பத்த வருடங்களுக்கு முன்னர் இவரது தந்தையார் இறந்துபோக இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்ட பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு மேல்படிப்பை தொடர்ந்துள்ளார்.

அந்தக்காலப்பகுதியில் அப்துல் லத்தீவ் ஜமீல் அகமட் மொஹமட்டினுடைய தாயார் கண்டியிலிருந்து கொழும்புக்கு வந்து அங்கு வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருந்தார். உயர்கல்வியை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய மொஹமட், தாயாருடன் கொழும்பு வீட்டில் தங்கியிருந்தபோது வீட்டு உரிமையாளரின் மகளை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதன் பின்னர் மொஹமட் தனது மனைவியுடன் கல்வி கற்பதற்காக ஆஸ்திரேலியா வந்தார். இதனை ஆஸ்திரேலிய பிரதமர் நேற்று ஒப்புக்கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவிலிருந்தபோது மொஹமட் தம்பதிகளுக்கு ஒரு குழந்தை. ஆனால் இறக்கும்போது முஹமட்டிற்கு நான்கு பிள்ளைகள். ஆறு, நான்கு, இரண்டு வயதுகளையுடைய மூவருடன் ஆறு மாதக்குழந்தையும் ஆகும். தற்போது பிள்ளைகள் பேர்த்தியாருடன் உள்ளனர். முஹமட்டின் மனைவியை பொலீஸார் விசாரணைக்கு அழைத்துச்சென்று தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

தனது தம்பியார் மிகவும் நகைச்சுவையுணர்வுடைய எல்லோருடனும் பழகக்கூடிய ஒரு நபராக காணப்பட்டார் என்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்ததுமுதல் அவரது நடத்தைகளில் பாரிய மாற்றங்கள் காணப்பட்டதாகவும் கூறினார். யாருடனும் அதிகம் பேசாதவராக - யாரும் பேசினாலும் எரிந்து விழுபவராக - ஏனையோருடன் தொடர்புகளை துண்டித்துக்கொள்வதையே அதிகம் விரும்புபவராக காணப்பட்டார் என்றும் அவர் கூறினார். சிறுவயதில் இசையில் மிகுந்த ஆர்வமுடையவராக காணப்பட்ட தனது சகோதரர் இறப்பதற்கு முன்பெல்லாம் தனது குழந்தைகள் இசை கேட்பதையே வெறுத்தார் என்று அவர் மேலும் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் குழந்தை கிடைத்து நாடு திரும்பிய பின்னர் வேலைக்கு செல்லவேண்டிய தேவை மொஹமட்டிற்கு இருக்கவில்லை என்றும் கண்டியிலிருந்த பரம்பரை சொத்து மற்றும் பாட்டனாரின் சொத்துக்களை காலத்துக்குக்காலம் வாங்கியும் விற்றும்கொண்டிருந்த முஹமட் என்றைக்குமே பணத்துக்கு குறைவில்லாதவராக காணப்பட்டார் என்றும் அவரது சகோதரி மேலும் தெரிவித்தார்.

அசாதரணமான மனிதனாக மாறத்தொடங்கியிருந்தாலும் தனது தம்பி இவ்வளவுதூரம் ஒரு முடிவெடுப்பான் என்று தான் நினைத்துப்பார்க்கவே இல்லை என்று முஹமட்டின் சகோதரி கூறினார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now