மனுஸ் தீவில் தனக்கு தானே தீமூட்டி தற்கொலைக்கு முயன்ற இந்திய அகதிக்கு எதிராக பாப்புவா நியூ கினி நீதிமன்றில் வழக்குத்தொடரப்படவுள்ளதாக மனுஸ் தீவு பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட அகதி தனது வசிப்பிடத்துக்கு தீவைத்து இந்த தற்கொலை முயற்சியை மேற்கொண்ட காரணத்தினால் பொதுக்கட்டடத்துக்கு நெருப்பு வைத்து சேதம் விளைவித்த குற்றத்துக்கு எதிராகவும் இவரின் மீது வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த Ravinder Singh என்ற 30 வயது இளைஞன் தற்போது முகம் மற்றும் கைகளில் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பப்புவா நியூ கினியில் அமுலில் உள்ள குற்றவியல் சட்டங்களின் கீழ் தற்கொலை முயற்சியானது ஒரு வருடம் வரையில் சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும். அத்துடன், தீ வைத்து பொது இடங்களுக்கு சேதம் விளைவிக்கும் குற்றமானது ஒருவருக்கு ஆயுள் தண்டனையையும் பெற்றுக்கொடுக்கக்கூடியது.
இந்நிலையில், தற்போது வைத்தியசாலையிலுள்ள இந்திய அகதிக்கு எதிராக குறிப்பிட்ட சட்டங்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது என்ற அறிவிப்பு பப்புவா நியூ கினி பொலீஸ் அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் லிபரல் கூட்டணி ஆட்சிபீடமேறிய பின்னர் மனுஸ் - நவுறு தீவுகளிலுள்ள சுமார் நூறு அகதிகள் இதுவரை தற்கொலைக்கு முயன்றிருப்பதாகவும் தங்களுக்கு தாங்களே ஊறு விளைவித்திருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share
