கொழும்பில் தொடர்குண்டுவெடிப்புக்கள் இடம்பெறுவதற்கு இரண்டு மணிநேரத்துக்கு முன்னரும் சிறிலங்கா புலனாய்வுத்துறைக்கு இந்தியா எச்சரித்திருந்தது என்று சிறிலங்கா புலனாய்வு அதிகாரியை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் சர்வதேச செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் தாக்குதல்களை நடத்தவதற்கான பெரிய ஏற்பாடுகள் நடைபெறுவதாக இந்த மாத ஆரம்பத்திலேயே இந்தியாவும் அமெரிக்காவும் சிறிலங்கா பாதுகாப்புத்தரப்பை எச்சரித்திருந்ததாக செய்திகள் வெளிவந்திருந்த நிலையில், தாக்குதல் இடம்பெற்ற அன்றும்கூட இந்தியாவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்ற தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், சிறிலங்கா அதிபர் நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது - தாக்குதல் எச்சரிக்கைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை என்றும் அவ்வாறு தெரிந்திருந்தால் தான் கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பேன் என்றும் கூறியிருந்தார். எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல் சம்பவம் எதுவும் இடம்பெறாதவண்ணம் நாட்டின் பாதுகாப்பினை உறுதிசெய்வது தனது பொறுப்பு என்றும் அவர் உறுதி கூறியிருந்தார்.
ஆனால், ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை மேலும் தெரிவித்தபோது தாக்குதல் அச்சம் குறித்து இந்திய தரப்பினர் சிறிலங்கா தரப்பினருக்கு தொடர்ந்து எச்சரிக்கைகளை வழங்கியவண்ணமிருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நியூஸிலாந்து மசூதிகளில் கடந்த மாதம் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துக்கு பதிலடியாகத்தான் சிறிலங்கா குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக சிறிலங்காவின் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்த கருத்து குறித்து நியூஸிலாந்து அரசு கூறும்போது அவ்வாறான தகவல்கள் எதுவும் தமது விசாரணைகளில் தெரியக்கிடைக்கவில்லை என்று கூறியுள்ளது.
