ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய அதிஷ்டலாபச் சீட்டிழுப்புக்களில் ஒன்றாக கருதப்பட்ட நேற்றைய 80 மில்லியனுக்கான குலுக்கலின் முடிவுகளை அறிவிப்பதில் நீண்டதாமதம் ஏற்பட்டிருந்தது. தொழில் நுட்பக் கோளாறு காரணமாக இத்தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் தங்களது அதிஷ்டத்தை சோதிப்பதற்கு அதிஷ்லாபச் சீட்டோடு நேற்றிரவு காத்திருந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் இதனால் ஏமாற்றமடைந்தனர்.
இறுதியில் மிகத்தாமதமாக 80 மில்லியன் Powerball Jackpot-க்கான வெற்றி இலக்கம் அறிவிக்கப்பட்ட போதும் division one வெற்றியாளர்கள் எவரும் தெரிவாகவில்லை.
அதனால், இந்த சீட்டிழுப்பின் வெற்றித்தொகை அடுத்தவாரத்துக்கு 100 மில்லியன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிஷ்டலாபச்சீட்டிழுப்பு தாமதம் குறித்து The Lott நிறுவனத்தின் தலைவர் Matt Hart கூறும்போது - அதிஷ்ட லாபச்சீட்டிழுப்பில் பங்குபற்றியவர்கள் அனைவரினதும் பதிவுகள் எந்த தரவுப்பிழைகளுமின்றி உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பது இந்த பொறிமுறையில் உள்ள அடிப்படைத்தேவையாகும். அந்தவகையில் - அரச கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப - நாங்கள் மேற்கொண்ட நடைமுறையின்போது நேற்றிரவு தாமதம் ஏற்பட்டுவிட்டது. ஒருகட்டத்தில் நிமிடம் ஒன்றுக்கு இரண்டாயிரம் சீட்டுக்கள் கொள்முதல் செய்யப்பட்டவண்ணமிருந்தன. அப்படிப்பட்ட வேகமான நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஈடுகொடுக்கவேண்டியிருந்தது- என தெரிவித்தார்.
அடுத்த வாரம் division one-இல் ஒருவர் 100 மில்லியன் டொலர்களையும் வெற்றிபெற்றால் ஆஸ்திரேலிய அதிஷ்டலாபச்சீட்டிழுப்பு வரலாற்றில் தனிநபர் ஒருவர் division one-இல் வெற்றிபெற்ற அதிகூடிய தொகை என்ற வரலாறு நிலைநாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
