தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவருமான மு.கருணாநிதி காலமானார்.
கடந்த பத்துநாட்களுக்கும் மேலாக தமிழகம் காவேரி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை இந்தியநேரப்படி 6.10 மணியளவில் காலமானார் என்று வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. காலமாகும்போது அவருக்கு வயது 95.
கருணாநிதி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக 5 தடவைகள் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அரசியல் பிரமுகர்களுள் ஒருவரான கருணாநிதி திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒரு பகுதியாக இருந்து, உறுப்பினர்களை நிறுவி 1969 ல் இருந்து கட்சியை வழிவகுத்து 50 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து, ஒரு வலிமையான சக்தியாக இருந்து தனது கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் திறம்பட வழிநடத்தியிருந்தார்.
கருணாநிதி அவர்கள், திருக்குவளை என்ற சிறிய குக்கிராமத்தில், ஜூன் 3ஆம் தேதி, 1924ஆம் ஆண்டு, முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தார்.
இவரது இயற்பெயர் தட்ஷிணாமூர்த்தி. பின் முத்துவேல் கருணாநிதி என்று பெயர் மாற்றி கடைசியில் கருணாநிதி என்று நிலைகொண்டது. அந்த சிறிய கிராமத்தில் தொடங்கிய அவரது வாழ்க்கை, உலகம் முழுக்க வியக்க வைக்கவும் வகையில் பெரிய அரசியல் வரலாறாக மாறியது.
முதல்முறையாக தமிழக சட்டமன்ற உறுப்பினராக 1957 வருடம் தேர்வானார். முதல்முறை தமிழக முதலமைச்சராக 1969-இல் தேர்வானார். இரண்டாவது முறையாக 1971-இலும் மூன்றாவது முறையாக 1989-இலும் நான்காம் முறையாக 1996-இலும் ஐந்தாம் முறையாக 2006-இலும் தமிழக முதலமைச்சராகத் தேர்வானார்.
அரசியலில் மட்டுமல்லாது திரைத் துறையிலும் வெற்றிகரமான கதையாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் கருணாநிதி விளங்கினார்.
'நெஞ்சுக்கு நீதி' எனும் தலைப்பில் தன் வரலாற்றை ஐந்து தொகுதிகளாக எழுதியுள்ள கருணாநிதி, பல உரைநடை மற்றும் கவிதை நூல்களையும் எழுதியுள்ளார்.
கருணாநிதிக்கு தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் ஆகிய மனைவிகள் உள்ளனர். மு.க.முத்து, மு.க. அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகிய மகன்களும் செல்வி, கனிமொழி ஆகிய மகள்களும் உள்ளனர்.
