ஆஸ்திரேலியாவின் 46 ஆவது நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அதிகரித்திருக்கிறது.
கடந்த தேர்தலிலும் பார்க்க கூடுதலாக ஐந்து பெண்கள் இம்முறை தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் நாற்பத்து ஐந்தாக அதிகரித்திருப்பதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இம்முறை தேர்தலில் இதுவரை வெளிவந்த தகவல்களின்படி, 27 பெண்கள் லேபர் கட்சியிலிருந்தும் 13 பெண்கள் லிபரல் கட்சியிலிருந்தும் சுயேட்சை மற்றும் ஏனைய கட்சிகளிலிருந்து 3 பெண்களும் House of representatives- கீழவைக்கு தெரிவாகியிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
செனட் சபையிலும் கடந்த வருடத்திலும் பார்க்க 5 பிரநிதித்துவத்தினால் அதிகரிப்பு எற்பட்டு இம்முறை செனட் சபைக்கு 35 பெண்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன்படி ஆஸ்திரேலிய நாடாளுமன்றின் இரு அவைகளையும் கூட்டினால் மொத்தமாக உள்ள 227 ஆசனங்களில் 81 இடங்களை சுவீகரித்து 35 வீத பிரதிநிதித்துவத்தை பெண்கள் உறுதிசெய்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான சம உரிமையை வழங்கும் வரிசையில் உலக அளவில் ஆஸ்திரேலியா இன்னமும் பின்தங்கியே உள்ளது என்று அண்மையில் வெளியான சர்வதேச நாடாளுமன்ற விவகாரங்கள் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் சமத்துவத்தின் அடிப்படையில் வாய்ப்பளிக்கும் வரிசையில் உலக அளவில் பேரு மற்றும் ஆங்கோலா போன்ற நாடுகளுடன் 48 ஆவது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
