தனது காதலியோடு தொடர்புடையவர் என்று கருதப்படுகின்ற நபரை தேடிச்சென்று டார்வின் துப்பாக்கிதாரி மேற்கொண்ட தாக்குதலின்போதே நால்வர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை தாங்கள் தற்போது விசாரித்துவருவதாக டார்வின் பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன் சம்பவத்தில் கொல்லப்பட்ட இருவர் துப்பாக்கிதாரிக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்ற தகவலும் தற்போது தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்தப்பட்ட அன்று - கடந்த செவ்வாய்க்கிழமை - முற்பகல் வேளையில் ஒரு தடவையும் அதன் பின்னர் மதியமும் துப்பாக்கிதாரி வாகனத்தில் வேகமாக சென்றுள்ளமை அவதானிக்கப்பட்டிருக்கிறது.
முற்பகல் 10.52 மணியளவில் 80km/h வீதியில் 94km/h வேகத்தில் சென்ற குற்றத்துக்காக பொலீஸாரால் நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறார்.
இரண்டாவது தடவை வேகமாக வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளதை கண்ட சிலர் பொலீஸாருக்கு அறிவித்ததையடுத்து, குறிப்பிட்ட நபரது தகவல்களை பெற்றுக்கொண்டு அவரை தேடிப்பிடிப்பதற்கு முன்னர் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
தாக்குதல் நடத்தப்பட்ட Palms விடுதியினுள் செல்வதற்கு முன்னர் அந்த வாளகத்தில் நின்றுகொண்டிருந்த டாக்ஸி ஓட்டுனரும் லெபனானிலிருந்து மாணவர் விசாவில் வந்து கல்விகற்றுக்கொண்டிருந்தவருமான நபர் துப்பாக்கிதாரியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அதன்பின்னர், தனது காதலியுடன் இரகசிய தொடர்புடையவர் என துப்பாக்கிதாரியால் சந்தேகிக்கப்பட்டவராக கருதப்படுகின்ற 'அலெக்ஸ்' என்ற நபரைத் தேடிச்சென்று விடுதிக்குள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
துப்பாக்கிதாரியின் சந்தேகம் குறித்தோ அந்த தகவல் குறித்தோ உறுதிப்படுத்தவில்லையெனினும் துப்பாக்கிதாரியினால் சந்தேகிக்கப்பட்ட நபர் பாதுகாப்பாக உள்ளார் என்று பொலீஸார் உறுதி செய்துள்ளார்கள்.
இதேவேளை, துப்பாக்கிதாரியினால் முதன் முதலாக சுட்டுக்கொல்லப்பட்ட நபர் துப்பாக்கிதாரியுடன் முரண்பட்டு கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
அந்த இடத்திலிருந்து இரத்தம் தோய்ந்த உடையோடு நான்கு இடங்களுக்கு சென்றுதான் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், கத்திக்குத்தினால் ஏற்பட்ட படுகாயங்கள் பாரதூரமானவை என்ற காரணத்தினால் துப்பாக்கிதாரிக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது வைத்தியசாலையில் பொலீஸ் பாதுகாப்பிலுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த நபர் மீது நான்கு கொலைக்குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
Share
