டார்வினில் தாக்குதல் நடத்திய நபர் நகரத்தின் மதிப்புமிக்க குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் சில நாட்களுக்கு முன்னர்தான் வேலைக்கு ஒழுங்காக சமூகமளிக்காத காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்றும் செய்திகள் தெரிவித்துள்ளன.
குறிப்பிட்ட நபர் பணிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவரது தாயார் வேலைத்தளத்துக்கு அழைப்பெடுத்து தனது மகனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கி உதவுமாறு கெஞ்சியதாகவும் கூறப்படுகிறது.
45 வயதான குறிப்பிட்ட நபர் இந்த வருட ஆரம்பத்தில் சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்தவர் என்றும் அவரது நடமாட்டத்தை கண்காணிக்கும் இலத்திரனியல் கருவி அவரில் பொருத்தப்பட்ட நிலையில் அவரது நடவடிக்கைள் சட்டத்துறையினரால் அவதானிக்கப்பட்டுவந்தது என்றும் பொலீஸார் தரப்பில் உறுதிசெய்யப்பட்டிருக்கின்றன.
சிறையிலிருந்து வெளியே வந்தது முதல் இவருக்கு தொடர்ச்சியாக மோட்டார் சைக்கிள் கும்பல்களுடனான சகவாசம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சுமார் ஐந்து இடங்களுக்கு அடுத்தடுத்து சென்று தாக்குதல் நடத்திய குறிப்பிட்ட நபர் தற்போது வைத்தியசாலையில் பொலீஸ் பாதுகாப்பிலுள்ளார். விரைவில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று பொலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த நபர் தாக்குதலுக்குப் பயன்படுத்திய துப்பாக்கி தடைசெய்யப்பட்டது துப்பாக்கிவகையைச் சேர்ந்தது என்றும் இது 1997-ஆம் திருடுபோயிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
இத்தாக்குதலில் கொல்லப்பட்ட நால்வரில் ஒருவர் Blue Taxi நிறுவனத்தைச் சேர்ந்த 33 வயதான Hassan Baydoun என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Share
