மெல்பேர்ன் மற்றும் கன்பராவிலுள்ள தூதரகங்களுக்கு மர்ம பொதிகளை தபாலில் அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் நபரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.
விக்டோரிய செப்பர்ட்டன் பகுதியைச்சேர்ந்த 48 வயதான இந்நபரை அவரது வீட்டில் வைத்து நேற்று இரவு தாங்கள் கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட நபர், மெல்பேர்ன் மற்றும் கன்பராவிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் வேறு இடங்களுக்கும் சுமார் 38 மர்ம பொதிகளை அனுப்பியுள்ளார் என்றும் இந்தப்பொதிகளை இவர் தனது செப்பர்ட்டன் வீட்டிலிருந்து அனுப்பியுள்ளதை தாம் கண்டறிந்துள்ளதாகவும் கூறியுள்ள பொலீஸார் - குறிப்பிட்ட நபரை கைது செய்வதற்கு தங்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு Australia Post நிறுவனத்தின் அனுசரணை பாரியளவில் உதவிபுரிந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டவருக்கு பத்து வருட சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
