ஆஸ்திரேலிய தலைநகர் கன்பராவிலும் மெல்பேர்னிலும் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் உட்பட சுமார் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று மதியம் சந்தேகத்துக்கிடமான பொதிகள் தபாலில் அனுப்பப்பட்டதையடுத்து அனைத்து கட்டடங்களும் உடனடியாக மூடப்பட்டு அங்கிருந்த உத்தியோகத்தர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அவசர சேவைகள் பிரிவினர் தூதரக கட்டடங்களுக்கு விரைந்துள்ள அதேநேரம் பொலீஸாரும் விசாரணைகளில் இறங்கியுள்ளனர்.
பொதிகளின் உள்ளே என்ன வைக்கப்பட்டிருந்தது என்று தெரியவரவில்லை. ஆனால் பாகிஸ்தான் தூதரக பெண்ணொருவர் பொதியை திறந்து பார்த்தபோது அதில் மர்மமான தூள் காணப்பட்டதாக உத்தியோகப்பற்றற்ற செய்தியொன்று தெரிவித்தது.
இன்று மதியமளவில் மெல்பேர்னிலுள்ள அமெரிக்க பிரித்தானிய தூதரகங்கள் உட்பட ஐந்து வெளிநாட்டு தூதரகங்களுக்கு இந்த மர்ம பொதிகள் அனுப்பட்டடதாக முதலில் செய்தி வெளியானபோதும் ஏனைய சில தூதரகங்களும் மெல்பேர்னில் தமக்கு இவ்வாறான பொதிகள் அனுப்பப்பட்டதை உறுதி செய்தன. பின்னர் கன்பராவிலும் பல தூதரகங்கள் தமக்கு இவ்வாறான பொதிகள் வந்துள்ளதாக தெரிவித்தன.
அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மானி, கிறீக், தென்கொரியா, நியூஸிலாந்து, இந்தியா உட்பட சில தூதரங்களுக்கும் இந்த பொதிகள் சென்றிருக்கின்றன. சம்பவத்தில் இதுவரைக்கும் யாருக்கும் எந்தப்பாதிப்பும் ஏற்படவில்லை. பொலீஸார் மும்முரமான விசாரணைகளில் இறங்கியுள்ளனர்.
