SKIP TO MAIN CONTENT

தீயின் பசி ஓய்ந்தது: Notre Dame தேவாலயம் மீண்டது!!

Debris is seen inside the damaged Notre Dame cathedral in Paris.
Debris is seen inside the damaged Notre Dame cathedral in Paris. Source: EPA

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

Notre Dame தேவாலயத்தில் சுமார் நானூறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்களின் 14 மணி நேரப்போராட்டத்தின் பின்னர் முற்றாக அணைக்கப்பட்ட தீ விபத்து குறித்து தற்போது விசாரரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

தேவாலயத்தில் ஏற்பட்டது விபத்து என்றுதான் தாங்கள் தற்போதைக்கு நம்புவதாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் தங்களது பூர்வாங்க அறிவிப்பில் தெரிவித்துள்ளனர். இருப்பினும், விபத்து இடம்பெற்றநேரம் அங்கு வேலை செய்துகொண்டிருந்த 200 க்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற அன்று மாலை 6.20 மணியளவில் தீ இடம்பெற்றதற்கான அலாரம் அடித்ததாகவும் உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு படைவீரர்கள், தீ ஏற்பட்டதற்கான எந்த தடயத்தையும் காணவில்லை என்றும் இரண்டாவது அலாரம் 6.48 மணியளவில் அடித்ததாகவும் அப்போது அங்கு தீயணைப்பு படை வீரர்கள் சென்றபோது தீ தேவாலயத்தின் மேற்பகுதிக்கு பரவி, தடுக்கமுடியாத தூரத்துக்கு சென்றுவிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடிய சுவாலைகளுடன் பற்றி எரிந்த நெருப்பு முழுத்தேவாலயத்தையும் எரித்து வீழ்த்திவிடும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டபோதும் மிகத்துணிச்சலுடன் - வேகமாக - இயங்கிய தீயணடைப்பு படை வீரர்களின் கடும் முயற்சியாலும் - 850 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இத்தேவாலயத்தின் அனர்த்தங்களிலிருந்து தப்பிக்கவல்ல வேலைப்பாடுகளினாலும் பெரும் அழிவு இடம்பெறாமல் தடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவாலயத்தின் கூரையும் அதனோடு இணைந்த பகுதிகளும் எரிந்து அழிந்துள்ளபோதும் கட்டுமானத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு படைவீரர்கள் பற்றியெரிந்துகொண்டிருந்த நெருப்புக்குள் மனிதச்சங்கிலியாக இணைந்து நின்று பல விலைமதிக்கமுடியாத பொக்கிஷங்களை மீட்டிருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. நடைபெற்றுக்கொண்டிருந்த கட்டடவேலைகளின் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பல முக்கிய பொக்கிஷங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருந்ததாலும் நிகழவிருந்த பேரிழப்பு தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது

இருந்தாலும், ஆயிரக்கணக்கான மரங்களைக்கொண்டு உட்கட்டுமானத்தில் அழகியல் வேலைப்பாடுகளுடன் கூடிய பொக்கிஷமாகவும் பிரான்ஸ் நாட்டின் அருங்காட்சியமாகவும் நிர்மாணிக்கப்பட்ட இந்த தேவாலயத்தின் பழைய அழகை மீண்டும் கொண்டுவருவது கடினம் என்று கட்டடக்கலை வல்லுனர்கள் தெரிவித்துள்னர். மீண்டும் அவ்வளவு தொகையான மரங்களைவெட்டி அதில் கலைவேலைப்பாடுகள் செய்துகொண்டுவந்து தேவாலயத்தில் பொருத்துவதற்கு தேவையான மரங்கள் இப்போது பிரான்ஸிலேயே இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், தேவாலயத்தை இன்னும் 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று பிரான்ஸ் நாட்டு பிரதமர் நாட்டுமக்களுக்கும் உலகளாவிய கத்தோலிக்கர்களுக்கும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேநேரம் மீள்கட்டுமானப்பணிகள் நிறைவடைய எத்தனை வருடங்கள் சென்றாலும் தேவாலயம் மீண்டும் பொலிவோடு எழுந்து நிற்கும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பிரான்ஸை சேர்ந்த கோடீஸ்வரர்கள் பல்லாயிரக்கணக்கான யூரோக்களை அள்ளி வழங்கி தேவாலயத்ததை கட்டியெழுப்புவதற்கு தங்களின் பங்களிப்பை அறிவித்துள்ளார்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now