குயின்ஸ்லாந்து மாநில சுகாதாரத் துறையிடமிருந்து 16 மில்லியன் டொலர் திருடியதற்காக சிறை சென்றிருந்த போலி தாஹித்திய இளவரசர் ஜோயல் மோரேஹு-ஃபார்லோ (Joel Morehu-Barlow) சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு நியூசிலாந்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
தன் மேல் சுமத்தப்பட்டிருந்த ஐந்து மோசடி குற்றச்சாட்டுகளையும் மூன்று போதைப் பொருள் குற்றச்சாட்டுகளையும் 2013 ஆம் ஆண்டில் மோரேஹு-ஃபார்லோ ஒப்புக் கொண்டிருந்தார்.
தற்போது 44 வயதாகியிருக்கும் மோரேஹு-ஃபார்லோ, தனது நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரத்தில் அவரது தாயாருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
மோரேஹு-ஃபார்லோவின் இயற்பெயர் ஹோஹெபா ஹிகைரோ (Hohepa Hikairo). குயின்ஸ்லாந்து மாநில சுகாதாரத் துறையில் நடுத்தர மேலாளராகப் பணிபுரிந்த வேளை, தனது பதவியைப் பயன்படுத்தி அக்டோபர் 2007 மற்றும் டிசம்பர் 2011 காலப்பகுதிக்கிடையில் நிதி மோசடி செய்ததாக சொல்லப்படுகிறது.
அப்படி மோசடி செய்த பணத்தின் மூலம், ஒரு பகட்டான ஆடம்பர வாழ்க்கையை பிரிஸ்பேன் நகரில் வாழ இவரால் முடிந்தது.
தனது பெயருக்கு முன், HRH (His Royal Highness) – மதிப்புக்குரிய அரச குடும்பத்தவர் என்ற பட்டத்தை சேர்த்துக் கொண்டிருந்த இவர், பல இரவு நேர களியாட்ட இடங்களில் பணத்தை வாரி வழங்கியுள்ளார்.
ஒரு தனி பணப் பரிவர்த்தனையில் 11 மில்லியன் டொலர் செலவழிக்க முனைந்த போது தான் இவரது மோசடிகள் வெளியே தெரியவந்தது.
