SKIP TO MAIN CONTENT

பொறுமையாக உணவருந்தினால் பருமனாக மாட்டீர்களா?

என்ன உணவு, எவ்வளவு உண்கிறோம் என்பதற்கும் மேலாக, எப்படி உண்கிறோம் என்பது முக்கியம் என்று ஜப்பானிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

food
Mixed Race woman eating hamburger at backyard party Source: Getty Images

2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Skip to article content

அதிக எடை மற்றும் பருமனான உடல் என்பன நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்களின் பல்வேறு வடிவங்கள் ஒருவரைப் பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைப்பது இந்த அபாயங்களைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  இருப்பினும், 40 - 69 வயதுடைய ஜப்பானிய ஆண்களிடையே 10 வருடங்களாக நடத்தப்பட்ட நீண்டகால ஆய்வில், அதிக எடை மற்றும் பருமனானவர்களின் விகிதம், இந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்று கண்டறியப்பட்டது.  உடல் பருக்க ஒரே காரணம் நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து நாம் பெறும் சக்தி, எமது செயற்பாட்டிற்காக நாம் செலவிடும் சக்தியை விட அதிகமாக இருப்பது என்பது தான்.  ஆனால், நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து பெறப்படும் சக்தி, என்ன உணவு, எவ்வளவு உண்கிறோம் என்பதற்கும் மேலாக, எப்படி உண்கிறோம் என்பதிலும் தங்கியிருக்கிறது என்று ஜப்பானிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

உலக சுகாதார அமைப்பான WHO – World Health Organisation, திடமான உடல் கொண்ட ஒருவர் 25 BMI அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும்.  ஒருவரின் உயரத்திற்கும் எடைக்குமான விகிதம் BMI (Body Mass Index) என்ற சுட்டெண்ணால் குறிக்கப்படுகிறது.  ஆசியப் பின்னணி கொண்டவர்களுக்கு இது 25ஐ விட குறைவாக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

92 363 பேருடன் ஜப்பானிய ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள்.  அவர்களுடைய மருத்துவ மற்றும் BMI குறியீட்டு தரவுகள் 2005ம் ஆண்டு ஜனவரி முதல் 2013ம் ஆண்டு ஜூன் வரையான காலப்பகுதியிலிருந்து சேர்த்து, அவர்களுடைய பழக்கவழக்கங்கள், முக்கியமாக அவர்களின் உணவுப் பழக்கங்களையும் ஆராய்ந்தார்கள்.

மெதுவாக சாப்பிடுபவர்களில் அதிகளவு பெண்கள் (44.4%) இருந்தார்கள்.  அவர்களது சராசரி BMI குறைவாகக் காணப்பட்டது (22.3 ± 4.0), பருமனானவர்கள் குறைவாக இருந்தார்கள் (21.5%), இடுப்பின் சுற்றளவு சராசரியாக 80.1 ± 10.6 செ.மீ – மற்றவர்களை விட குறைவாக இருந்தார்கள்.

ஆனால் வேகமாக உணவை உட்கொள்பவர்களின் BMI, சராசரியாக 25.0 ± 4.4 ஆக இருந்தது.  அவர்களின் இடுப்பளவு, சராசரியாக 86.8 ± 11.1 செ.மீ ஆக கணக்கிடப்பட்டது.

உணவை உட்கொள்ளும் போது நேரமெடுத்து ஆறுதலாக உண்பது உடலுக்கு நல்லது என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட Yumi Hurst மற்றும் Haruhisa Fukuda.  அவர்களது ஆய்வறிக்கையை முழுமையாகப் படிக்க:  http://bmjopen.bmj.com/content/8/1/e019589

 

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now