பிரதமர் Malcolm Turnbull- இன் தலைமைத்துவத்திற்கு இரண்டாவது தடவையாக சவால் விடுக்கவுள்ளதாக முன்னாள் உள்துறை அமைச்சர் Peter Dutton அறிவித்துள்ள நிலையில்,Dutton-க்கு எதிராக Treasurer-கருவூலக்காப்பாளர் Scott Morrison போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து தலைமைத்துவ சவாலில் பங்கேற்காமல் பிரதமர் Malcolm Turnbull ஒதுங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் Malcolm Turnbull- க்கும் Peter Dutton-க்கும் இடையில் நடைபெற்ற முதலாவது தலைமைத்துவப் போட்டியில் Malcolm Turnbull 13 வாக்குகளால் வெற்றிபெற்றிருந்த போதிலும், தற்போது முக்கிய அமைச்சர்கள் பலர் தமது ஆதரவை மீளப்பெற்றுள்ளதால் பிரதமர் மீண்டுமொரு தலைமைத்துவ சவாலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை பிரதமரைத் தொடர்புகொண்டு பேசிய Peter Dutton தான் மீண்டும் தலைமைத்துவ சவாலை முன்வைக்கவுள்ளதாகவும், வாக்கெடுப்பு நடத்துவதற்காக கட்சியின் உயர்மட்டக்கூட்டத்தைக் கூட்டவேண்டுமென்றும் கோரிக்கைவிடுத்திருந்ததுடன் இரண்டாவது தலைமைத்துவ சவாலில் வெற்றிபெறுவதற்குத் தேவையான வாக்குகளைப்பெற முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதேவேளை Mathias Cormann, Michaelia Cash ,Mitch Fifield ஆகிய 3 முக்கிய அமைச்சர்கள் பதவிவிலகலை அறிவித்துள்ள அதேநேரம் Peter Dutton-க்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதுடன், பிரதமருக்கு கட்சிக்குள் பெரும்பான்மை ஆதரவு இல்லை என அவரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பின்னணியில் கருவூலக்காப்பாளர் Scott Morrison தலைமைத்துவப் போட்டியில் களமிறங்குவது ஆஸ்திரேலிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
