SKIP TO MAIN CONTENT

தமிழ் குடும்பத்தை தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்குமாறு ஆஸ்திரேலியாவிடம் ஐ.நா வலியுறுத்தல்!

The family are currently detained on Christmas Island.
The family are currently detained on Christmas Island. Source: Facebook

2 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த பிரியா-நடேஸ் குடும்பத்தை கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிலிருந்து விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

குறித்த தம்பதியினரும் அவர்களது இரு பிள்ளைகளும் நாடுகடத்தலுக்கெதிராக தொடர்ந்தும் போராடிவரும் நிலையில் அவர்களை 30 நாட்களுக்குள் குறித்த முகாமிலிருந்து விடுவித்து சமூகத்தில் வாழ அனுமதிக்குமாறும் அங்கிருந்துகொண்டு அவர்கள் தமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் சபை தெரிவித்துள்ளது.

பிரியா-நடேஸ் குடும்பத்தின் சார்பில் வாதாடிவரும் சட்டத்தரணி கரீனா ஃபோர்ட்ஸ் ஐ.நாவின் தலையீட்டை கோரியிருந்த நிலையில் அவருக்கு அனுப்பிவைக்கப்பட்ட பதில் கடிதத்தில் ஐ.நா மனிதஉரிமைகள் சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா சபையின் இந்நடவடிக்கையானது மிகுந்த மகிழ்ச்சி தருவதாகவும் ஆஸ்திரேலிய அரசின் செயற்பாடுகளை ஐ.நா கவனித்துக்கொண்டுள்ளது என்பது இதன் மூலம் புலப்படுவதாகவும் அகதிகள் செயற்பாட்டாளரும் பிரியா-நடேஸ் குடும்பத்தின் நெருங்கிய நண்பருமான அஞ்சலா பிரெட்ரிக்ஸ் தெரிவித்தார்.

இதேவேளை பிரியா-நடேஸ் குடும்ப விவகாரம் தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு சார்பில் வழங்கப்பட்ட விளக்கத்தை ஆராய்ந்த பின்னரே ஐ.நா மனித உரிமைகள் சபை இந்நடவடிக்கையை எடுத்திருந்ததாகவும் இதற்கு செவிசாய்க்க வேண்டிய கடப்பாடு ஆஸ்திரேலிய அரசுக்கு இருப்பதாகவும் தமிழ் ஏதிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்தார்.

அதேநேரம் ஐ.நாவின் கோரிக்கையை அரசு நிறைவேற்றுவதாக இருந்தால் குறித்த குடும்பம் தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவிலேயே சமூகத்துடன் வாழ அனுமதிக்கப்படுமா அல்லது ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்படுவார்களா என்பது தெரியவில்லை என்றும் அரன் மயில்வாகனம் தெரிவித்தார்.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களான பிரியா மற்றும் நடேஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு மகள்கள் கோபிகா மற்றும் தருணிகா ஆகியோர் சுமார் ஒன்றரை வருடங்களாக மெல்பேர்னிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில், சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போதிலும் இறுதி நேரத்தில் குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிமன்றம் கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து விமானம் டார்வினில் தரையிறங்கிய போது குடும்பம் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு, பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து தருணிகாவின் பாதுகாப்பு குறித்தும், தருணிகாவின் சூழ்நிலைகளை உள்துறை அமைச்சர் மதிப்பீடு செய்திருக்க வேண்டுமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் தீர்ப்புவழங்குவதற்கு கால அவகாசம் எடுத்திருந்த பின்னணியில்  தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில்  முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும் என செப்டம்பர் 19ம் திகதி  நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது.

இதன்படி பிரதான விண்ணப்பதாரியான தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

தருணிகா குழந்தை என்பதால் அவரிடமிருந்து பெற்றோரை தனியாகப்பிரித்து நாடுகடத்தமுடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தப்பித்திருந்த பின்னணியில் கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிலேயே தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now