இந்தோனேஷியா அகதிகள் தடுப்புமுகாமில் வாழ்ந்துவந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் நேற்று இடம்பெற்ற வாகனவிபத்தில் மரணமடைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம்தேடி வந்தபோது, கடலில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டநிலையில், இந்தோனேஷியாவிலுள்ள தடுப்புமுகாமில் வாழ்ந்து வந்த, ஜோன்சன் ஜேசுதாஸ் ஜெயதேவ் என்ற தமிழரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட 40 வயதான ஜோன்சன் ஜேசுதாஸ் ஜெயதேவ், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து, தமிழகத்திலுள்ள அகதிமுகாமொன்றில் சில காலம் வாழ்ந்ததன்பின்னர், படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு வரமுற்பட்டபோது, அம்முயற்சி பலனளிக்காத நிலையில், இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவிலுள்ள தடுப்பு முகாமொன்றில், கடந்த சில வருடங்களாக தங்கவைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை ஜோன்சன் ஜேசுதாஸ் ஜெயதேவ் ஒரு உண்மையான அகதி என UNHCR எனப்படும் அகதிகளுக்கான அமைப்பு இனங்கண்டிருந்த அதேநேரம், மூன்றாவது நாடொன்றில் குடியமர்த்தப்படுவதற்காக காத்துக்கொண்டிருந்தவேளையிலேயே இவர் விபத்தில் பலியாகியுள்ளார்.
ஜோன்சன் ஜேசுதாஸ் ஜெயதேவின் குடும்பத்தினர் தமிழகத்தில் வாழ்ந்துவருவதால், அவரது உடலை அங்கு அனுப்புவதில் சிக்கல் உள்ளதால், அதனை இந்தோனேஷியாவிலேயே அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக, அவரது நண்பர்கள் SBS தமிழிடம் தெரிவித்தனர்.
இந்தோனேஷியா தடுப்பு முகாமில் வாழ்ந்த, சந்தியா என்ற மற்றுமொரு தமிழ் புகலிடக்கோரிக்கையாளர், உடல்நலமின்மை காரணமாக இம்மாத ஆரம்பத்தில் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
