ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய தமிழரான திலீபன் என்ற 30 வயது நபர் இன்று நாடுகடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வருட ஆரம்பம் முதல் சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள திலீபனை நாடுகடத்துவதற்கான உத்தரவு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டதாகவும் இதையடுத்து அவர் இன்று நாடுகடத்தப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
2012ம் ஆண்டு இலங்கையிலிருந்து வந்து புகலிடம் கோரிய திலீபன் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்திருந்த அதேநேரம் இவருக்கு ஒரு வயது மகளும் இருக்கிறார்.
திலீபனின் மனைவி மற்றும் மகளுக்கு தொடர்ந்தும் இங்கு வாழ்வதற்கு ஏதுவாக Safe Haven Enterprise விசா கடந்தவாரம் வழங்கப்பட்டுள்ள பின்னணியில், திலீபன் தனது குடும்பத்திலிருந்து நிரந்தரமாக பிரிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனினும் திலீபன் இன்று நாடுகடத்தப்பட்டுவிட்டாரா அல்லது இனிமேல்தான் நாடுகடத்தப்படவுள்ளாரா என்ற தகவல் ஏதுவும் தமக்கு தெரியாது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை திலீபன் தனது குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி இன்று விலவூட் தடுப்பு முகாமுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதுஒருபுறமிருக்க புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் விலவூட் தடுப்பு முகாமிலிருந்த இன்னும் சிலர் இன்று நாடுகடத்தப்படவிருந்ததாகவும் இவர்களில் இருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும் மற்றொரு செய்தி கூறுகின்றது.
