ரகுராமின் “பணி நீக்கம்” தொடர்பாக எதிர்ப்புத் தெரிவித்தும் நிர்வாகத்தின் செயலுக்குத் தகுந்த காரணம் கோரியும் முன்னாள் மற்றும் உயர்தரவகுப்பு மாணவர்களினால் வெளிநடப்புப் போராட்டமொன்று நேற்று சனிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக இன்னொரு செய்தி பரவியது. இந்த செய்தியைத் தொடர்ந்து வெளிநடப்பு தொடர்பாக தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஒருவித பதட்டம் எழுந்தது. இதனிடையே தமிழ்ப் பாடசாலை நடவடிக்கைகளிற்குப் பங்கம் விளைவிக்கும் நோக்கில் சில செயற்பாடுகளில் சிலர் பாடசாலை வளாகத்திற்குள் பங்குபற்ற உள்ளதாகத் தமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இப்படியான எந்த நடவடிக்கைகளிலும் ஆசிரியர்கள் ஈடுபட்டால், தமது பாடசாலைக்குக் களங்கம் ஏற்படுவதோடு மாணவர்களின் பாதுகாப்புக்கும் பங்கம் விளையும் எனவும், பாடசாலை வளாகத்திற்குள் நடைபெறும் எந்த இடையூறும் தமிழ் பாடசாலை தொடர்ந்தும் அந்த வளாகத்தில் இயங்குவதற்கான அனுமதியை இழப்பதற்கு ஏதுவாக அமையலாம் என்றும் நிர்வாகத்தினரால் சகல ஆசிரியர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மின்னஞ்சல் காரணமாகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ மாணவர்களின் போராட்டம் நேற்று நடைபெறவில்லை.
இதனிடையே, கடந்த ஏழு வருடங்களாக Wentworthville தமிழ்க் கல்வி நிலையத்தில் HSC ஆசிரியராகக் கடமையாற்றிவந்த தன்னை முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளாமல் நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளதாக எட்டுப் பக்கங்கள் கொண்ட ஒரு மின்னஞ்சலை திரு நவரட்ணம் ரகுராம், எமது வானொலி உட்படப் பலருக்கு கடந்தவாரம் அனுப்பியிருந்தார்.
இதுபற்றி மேலும் அறிவதற்காக ரகுராமை தொடர்பு கொண்டபோது, நேற்று அதிகாலை தனது பணி நீக்கத்துக்கான எட்டுக் காரணங்களை நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் ஆனால் தான் அவை அனைத்தையும் நிராகரிப்பதாகவும் ரகுராம் தெரிவித்தார். மேலும் நிர்வாகம் கலந்துரையாடலுக்கென்று அழைத்துவிட்டுத் தலைவர் அதிபர் உட்பட ஆறுபேர் கொண்ட குழு தன்மீது விசாரணை - interrogation செய்ததாகக் குற்றஞ்சாட்டினார். மேலும் நேற்று பாடசாலைக்கு வந்திருந்த நான்கு மாணவர்களை நிர்வாகத்தினர் ஓர் அறையினுள் பூட்டிவைத்ததாகவும் ரகுராம் குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் ரகுராம் தொடர்பான சம்பவம் பற்றி பள்ளிக்கூட அதிபர் திரு தேவரஞ்சித் அவர்களைத் தொடர்பு கொண்ட போது, அதுபற்றி எதுவிதமான கருத்துக்களையும் அவர் கூற மறுத்துவிட்டார்.
ஆனாலும் பள்ளிக்கூட நிர்வாகத்தின் தரப்பின் கருத்துகளையும், ரகுராம் அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் பள்ளிக்கூட நிர்வாகக் குழுவின் கருத்துக்களை நிச்சயம் நமது நேயர்களுக்கு எடுத்துவரவேண்டும் என்ற நோக்கில், நாம் பள்ளிக்கூட செயலாளர் திரு பார்த்தீபன் அவர்களை அணுகினோம். ரகுராம் தொடர்பான விடயத்தில் சில மாணவ மாணவிகள் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர்களின் பாதுகாப்பு, எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே தாம் ரகுராம் பணி சர்ச்சை தொடர்பான காரணங்களைப் பகிரங்கப்படுத்தவில்லை எனத் தெரிவித்தார். மேலும் “பணிநீக்கம்” என்ற சொற்பதத்தை பயன்படுத்துவதை பள்ளிக்கூட நிர்வாகம் ஏற்கவில்லை என்றும், ரகுராமின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பள்ளிக்கூட நிர்வாகம் முற்றாக நிராகரிப்பதாகவும் கூறினார். அத்துடன் மாணவர்களை அறையினுள் வைத்துப் பூட்டியதாக ரகுராம் முன்வைக்கும் குற்றச்சாட்டினை திரு பார்த்தீபன் முற்றாக மறுத்தார்.
ஆசிரியர் திரு ரகுராம் அவர்கள் பாடசாலை நிர்வாகம் மீது கூறியுள்ள பல குற்றச்சாட்டுகள் மற்றும் பாடசாலை நிர்வாகம் சார்பாக திரு பார்த்தீபன் அவர்கள் எமக்கு வழங்கிய விளக்கம் ஆகியவற்றை விரைவில் எமது ஒலிபரப்பில் எதிர்பாருங்கள்.