தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆஸ்திரேலியாவில் ஆசிய மொழிக்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டினை அதிகரிக்கவுள்ளதாகவும் தற்போதைய யோசனையின்படி 32 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டினை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் லேபர் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக லேபர் கட்சியின் கல்வித்துறைக்குப்பொறுப்பான பேச்சாளர் Tanya Plibersek கூறும்போது-தற்போதைய அரசின் ஆட்சிக்காலத்தில் ஆசிய மொழிக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் ஆசிய மொழிகளை பாடசாலைகளில் கற்பிப்பதற்கும் கற்பதற்குமான ஊக்குவிப்புக்கள் மிகவும் குறைக்கப்பட்டிருக்கின்றன என்றும் அதனை தாங்கள் நிவர்த்தி செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
12 ஆம் ஆண்டு பரீட்சையில் ஆசிய மொழிகளை கல்வி கற்பதற்கு தேர்வு செய்யும் ஆஸ்திரேலிய மாணவர்களின் தொகையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி இதற்கு நல்ல உதாரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆசிய மொழிக்கல்விக்கான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு குறிப்பிட்ட மொழியை கற்பிப்பதற்காக ஆசிரியர்களை அதிகரிப்பது, அவர்களுக்கு பயிற்சி வழங்குவது, மொழிவழி பாடத்திட்டங்களை புதிதாக கொண்டுவருவது, அவற்றை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து கற்றல் நடவடிக்கைக்கான ஊக்குவிப்புக்களை மேற்கொள்வது என்று பல்வேறு நடவடிக்கைகளை செயற்படுத்தவுள்ளதாகவும் முக்கியமாக ஹிந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியமொழியில் திறமையை நிரூபிக்கும் மாணவர்களுக்கு வருடமொன்றும் 100 புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு தமது கட்சி முடிவெடுத்திருப்பது மாத்திரமல்லாமல் இந்த புலமைப்பரிசில் மூலம் குறிப்பிட்ட மாணவர்களை ஆசிரியர் தர தகுதியை பெறும்வரைக்கும் பயிற்றுவிப்பதற்கும் உதவியளிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக Tanya Plibersek மேலும் தெரிவித்திருக்கிறார்.
