
RaySel Source: SBS Tamil
றைசெல்
வானொலி நேயர்களுக்கு “றைசெல்” என்று அறியப்படும் றைமண்ட் செல்வராஜ் கடந்த சுமார் 28 ஆண்டுகாலமாக ஒலிபரப்புத்துறையில் ஈடுபட்டுவருகிறார். வேரித்தாஸ் வானொலி மற்றும் சமூக வானொலிகள் இவர் கடந்து வந்த பாதைகள். ஊடகத் துறையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் இவரின் கல்வித்தகுதிகள். கடந்த சுமார் 12 ஆண்டுகள் SBS தமிழ் ஒலிபரப்பின் நிறைவேற்றுத் தயாரிப்பாளர்.
றேணுகா துரைசிங்கம்

Source: Renuka.T
இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த றேனுகா துரைசிங்கம் புலம்பெயர்ந்து கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்னில் வசித்துவருகிறார். ஊடகத்துறையில் தனது கற்கைநெறிகளை மேற்கொண்ட றேனுகா, இலங்கையில் உள்ள தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களில் பணியாற்றியிருக்கிறார்.

Maheswaran Prabaharan Source: SBS
மகேஸ்வரன் பிரபாகரன்
தமிழ் ஒலிபரப்பில் இருந்த ஆர்வத்தின் உந்துதலால், 1992இல் தனது நிகழ்ச்சிகளை ஒரு பொழுது போக்காக ஆரம்பித்தார். பின்னர், 24 மணி நேர தமிழ் சமூக வானொலி ஆரம்பிக்கப்பட்ட 2002 இலிருந்து 2013 வரை தனது பணியை அங்கு தொடர்ந்தார். SBS உடனான அவரது வானொலிப் பணி, 2002இல் தற்காலிக ஒலிபரப்பாளராக ஆரம்பமாகித் தற்போது பகுதி நேர நிகழ்ச்சித் தயாரிப்பாளராகத் தொடர்கிறது. முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் முழு நேர வேலை என்பன தொழில்நுட்பத் துறை என்றாலும், வானொலி ஒலிபரப்பு, மேடையில் கலை கலாசார இசை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குதல் ஆகியவற்றை மிகவும் அனுபவித்துச் செய்து வருகிறார்.

Sanchayan Source: SBS Tamil
குலசேகரம் சஞ்சயன்
குலசேகரம் சஞ்சயன் இளம் வயதிலிலிருந்து கதை சொல்வதில் ஆர்வமுள்ளவர். பாடசாலை நாட்களிலிருந்து, மேடைப் பேச்சு,விவாவதம், நாடகம் என்று பல வழிகளில் தன் ஆர்வத்தை வெளிப்படுத்திவருபவர். அந்தவகையில் SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பு, அவருக்கு ஒரு நல்ல தளமாக அமைந்திருக்கிறது. பொறியியலில் இளங்கலைப் பட்டமும் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்ற இவர், தற்பொழுது, மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தலில் ஆலோசனைதரும் நிறுவனம் ஒன்றை இயக்கி வருகிறார். வாசித்தலிலும் புதிய தொழில்நுட்பங்களிலும் அவருக்குள்ள ஈடுபாடு அவர் தயாரித்து வழங்கும் நிகழ்ச்சிகளில் பிரதிபலிக்கிறது.

Selvi Source: SBS Tamil
செல்வி
செல்வி இந்தியாவில் பிறந்தவர். அங்கு கணினி துறையில் பட்டம் பெற்றவர். அவர் 1997 ஆம் ஆண்டுஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்து கணினி மென்பொருள்பொறியாளராக பணியாற்றினார். 10 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா தமிழ் சமூக வானொலியில் பணியாற்றி ஒலிபரப்பு அனுபவம்பெற்றவர். SBS வானொலியோடு 2013 ஆம் ஆண்டு இணைந்து தொடர்ந்து பணியாற்றிவருகிறார். செய்தி தயாரிப்பு, குழந்தைகள் நிகழ்ச்சிகள், திரைப்பட விமர்சனம் மற்றும் தற்போதைய விவகாரங்களில் நிகழ்ச்சிகள் தயாரிப்பதில் அனுபவம் உள்ளவர்.

Kanthakumar Source: SBS Tamil
காந்தகுமார்
மதிவாணன் என்று SBS தமிழ் நேயர்கள் அறிந்த விஸ்வராசா காந்தகுமார் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த சுமார் 18 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இவர் சர்வதேச தமிழ் ஊடகங்களுக்கும் பணியாற்றியுள்ளார் என்பது இன்னொரு சிறப்பு. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளராக பணி செய்துவரும் இவர், சுதந்திர ஊடகவியலாளராகவும், தொலைக்காட்சி செய்தியாளராகவும் பணி செய்துவருகிறார்.

Raj Source: SBS Tamil
ராஜ்
இந்தியாவிலிருந்து செய்திகளை விவரணங்களாக்கி உடனுக்குடன் வழங்கிவரும் ராஜ் SBS தமிழ் ஒலிபரப்பின் செய்தியாளராக கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றிவருகிறார். பள்ளிக்கூட பருவத்திலிருந்தே இதழியல் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட ராஜ், பத்திரிகை, தொலைக்காட்சி என்று பரந்துபட்ட ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.