Highlights
- அண்மையில் சிட்னியில் வைத்து கைதுசெய்யப்பட்ட கண்ணா பெர்த்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
- 31 வயது கண்ணா நாடற்றவர் என குறிப்பிடப்படுகிறது.
- கண்ணாவின் விடயத்தில் உள்துறை அமைச்சர் Karen Andrews-ஐ தலையிடுமாறு கோரப்பட்டுள்ளது.
இலங்கைப் பின்னணிகொண்ட கஜேந்திரன் மோகன் அல்லது கண்ணா என்ற 31 வயது இளைஞர் இந்தியாவிலுள்ள அகதிகள் முகாமில் பிறந்தவர் எனவும் 2013ம் ஆண்டு படகுமூலம் ஆஸ்திரேலியா வந்து புகலிடம் கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கண்ணாவின் bridging விசா கடந்த 2017ம் ஆண்டு காலாவதியாகிவிட்டதாகவும், அதைத்தொடர்ந்து அவருக்கு மெடிகெயார் உள்ளிட்ட அரச உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும், வேலைசெய்வதற்கான உரிமையும் மறுக்கப்பட்டதால் தங்குமிடம் மற்றும் வாழ்வாதார வசதிகளின்றி இவர் அல்லல்பட்டுவந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக கடந்த 3 ஆண்டுகளாக கடும்நோய்வாய்ப்பட்டிருந்த கண்ணா 6 மாதங்களில் 20 கிலோ எடை குறைந்ததாகவும், latent tuberculosis நோயினால் இவர் பீடிக்கப்பட்டிருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாகவும் தமிழ் ஏதிலிகள் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bridging விசாவுக்கான கண்ணாவின் விண்ணப்பம் இவ்வருட ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப்பின்னணியில் கண்ணா சிட்னியிலுள்ள தனது நண்பர்களைச் சந்திக்கச்சென்றபோது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு Yongah Hill தடுப்பு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுவிட்டதாகவும், ஒரு வாரம்வரை இவர் எங்கே இருக்கிறார் என்பதைத் தெரியப்படுத்தவில்லை எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணா இந்திய அகதிகள் முகாமில் பிறந்தவர் என்பதால் இவருக்கு இந்தியக் குடியுரிமையோ அல்லது இலங்கை குடியுரிமையோ இல்லை எனவும் இவர் நாடற்றவராகவே கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக ஆஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட கண்ணாவை திருப்பி அனுப்புவதிலும் சிக்கல் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் கண்ணாவின் மருத்துவநிலைமை மற்றும் அவரது பின்னணியைக் கருத்திற்கொண்டு அவருக்கு ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு விசா வழங்கப்படவேண்டுமெனவும், அவர் Yongah Hill தடுப்பு மையத்திலிருந்து விடுதலைசெய்யப்பட்டு சிட்னிக்கு அழைத்துவரப்பட வேண்டுமெனவும் தமிழ் ஏதிலிகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.
சிட்னியில் பல நண்பர்கள் இருப்பதால் அவர்களது உதவி கண்ணாவுக்கு கிடைக்கும் என தமிழ் ஏதிலிகள் கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கண்ணாவின் விடயத்தில் உள்துறை அமைச்சர் Karen Andrews-ஐ தலையிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
