SKIP TO MAIN CONTENT

நவுறுவில் காரால் மோதி தாக்கப்பட்ட தமிழ் அகதிக்கு ஆஸ்திரேலியாவில் சிகிச்சை!

Refugee Action Coalition
Source: Refugee Action Coalition

1 min read

Published

Updated


Skip to article content

நவுறுவில் தமிழ் அகதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது வீதியால் சென்ற கார் ஒன்று வேண்டுமென்றே மோதியதையடுத்து கடும் காயங்களுக்கு உள்ளாகியிருந்தநிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர் ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய் இரவு 36 வயதான இந்நபர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த நவுறுவாசிகள் சிலர் அவர் மீது காரை மோதி கீழே விழச்செய்துவிட்டு மோட்டார் சைக்கிளைக் களவாடிக்கொண்டு சென்றதுடன் கீழே விழுந்துகிடந்தவர்மீது காரை ஏற்றிச்சென்றுள்ளனர்.

இதையடுத்து கை, கால், முகம், முதுகு என பல இடங்களில் என்பு முறிவுக்குள்ளாகி ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக நேற்று சனிக்கிழமை ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டதாக Refugee Action Coalition தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலை மேற்கொண்டவர்களில் இருவர் நவுறு தடுப்புமுகாமில் பணிபுரிந்தவர்கள் எனவும், குறித்த நபர் அங்கிருந்தகாலத்திலிருந்தே அவர்களுக்குத் தெரியும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை இத்தாக்குதல் சம்பவமானது ஒரு கொலைமுயற்சி எனத் தெரிவித்துள்ள Refugee Action Coalition-இன் பேச்சாளர் Ian Rintoul, நவுறு தீவானது அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆபத்தான இடம் எனவும் அவர்கள் தொடர்ச்சியாக பல அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் நவுறு தீவிலுள்ள சுமார் 127 அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்டு அவர்கள் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென Ian Rintoul வலியுறுத்தியுள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now