நேற்று பகல், டஸ்மேனியா மாநிலத்தின் ஃகீவ்ஸ்டன் (Geeveston) என்ற இடத்திற்கு பயணி ஒருவரை எடுத்துச் சென்றுள்ளார் சதாசிவம் மதிவதனன் (மதி) என்ற வாடகை வாகன ஓட்டுநர். பயணி சென்றடைய வேண்டிய இடத்தை மதிய நேரத்திற்கு சற்று முன் அடைந்ததும் அந்தப் பயணத்திற்கான தொகை $80 என்று மதி கூறியதும், அதற்கான பணம் தன்னிடம் இல்லையென்றும், தனது நண்பரிடம் அதைப் பெற்றுத் தருவதாகவும் அந்தப் பயணி கூறியிருக்கிறார். சரி என்று, அதனை ஒப்புக் கொண்ட மதி, பயணி அந்த நண்பரின் வாகனத்திற்குச் சென்று பணத்தைப் பெற்று வர அனுமதித்துள்ளார். பயணி வெறும் சில்லறையுடன் திரும்பி வந்த போது, பணமில்லை என்றால், உங்கள் அடையாள ஆவணம் ஒன்றை தந்து விட்டுச் செல்லுங்கள், பணத்தைத் தந்த பின்னர் அந்த ஆவணத்தை மீளப் பெறலாம் என்று கூறியிருக்கிறார்.
பயணி, மீண்டும் அந்த நண்பரின் வாகனத்திற்குச் சென்றிருக்கிறார். ஆவணத்தை எடுத்து வர அவர் சென்றார் என்று மதி நினைத்துக் கொண்டிருந்த நேரம், அந்த நண்பரின் வாகனத்தில் பயணி ஏறி, அந்த இடத்தை விட்டு ஓடி விட முனைந்திருக்கிறார். மதி அவர்களை நிறுத்தும் நோக்கத்துடன் வாகனத்திற்கு முன்னர் செல்ல, அந்த நண்பர் மதி மேல் வாகனத்தை ஏற்றி, ஒரு 600 மீட்டர் வரை வேகமாக வாகனத்தை ஓட்டி, சடுதியாக நிறுத்த வாகனத்திலிருந்து கீழே விழுந்த மதியின் முழங்கால் வாகனத்தின் கீழே மாட்டிக் கொண்டது.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஃகீவ்ஸ்டன் பகுதி மக்கள் அந்தப் பயணியையும் அவரது நண்பரையும் சூழ்ந்து கொண்டனர். மதிக்கு மருத்துவ உதவி தேவை என்று ஆம்புலன்ஸ் (அவசர சிகிச்சை) வாகனத்தை வரவழைத்து மதியை மருத்துவமனையில் சேர்த்தது மட்டுமின்றி, அந்தப் பயணியையும் அவரது நண்பரையும் காவல்துறையிடம் கையளித்துள்ளனர்.
முழங்காலில் முறிவு ஏற்பட்டுள்ள மதி, ஒரு வருடத்திற்கும் மேலாக தான் வேலை செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறியதாகச் சொல்கிறார். பதின்னான்கு வயது மகனுக்கும் பன்னிரண்டு வயது மகளுக்கும் தகப்பனான மதி, ஆஸ்திரேலியாவிற்குப் புகலிடம் தேடி வந்தவர். எட்டு வருடங்களுக்கு முன் டஸ்மேனியா மாநிலத்தில் வசிக்க ஆரம்பித்த அவர் ஒரு வருடத்திற்கும் மேல் வாகனம் ஓட்ட முடியாமல் போனால் தன் குடும்ப சுமையை எப்படிப் பொறுப்பது என்று யோசிக்கிறார்.
மதி ஓட்டும் வாடகை வாகனத்தின் உரிமையாளர் முத்து, தமிழ்நாட்டில் காவல் துறையில் பணியாற்றியவர். ஒரு வருடத்திற்கும் மேலாக மதி வேலை செய்ய முடியாது என்பதை ஏற்றுக் கொள்ளும் அவர், காப்பீடு (Workers Compensation Insurance) அவரைக் காப்பாற்றும் என்று நம்புகிறார்.
