விசேட தேவைக்கு உட்பட்ட பாதுகாப்புதுறைசார் வீரர்களுக்கான விளையாட்டுப்போட்டியில்(invictus games) பங்குபற்றுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு வந்து அகதிகளாக தஞ்சம் கோரிய ஆப்கான் அணியை சேர்ந்த ஆறுபேருக்கு ஆஸ்திரேலிய அரசு நிரந்தர பாதுகாப்பு விசா வழங்கியிருக்கிறது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் invictus விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்வதற்காக ஆஸ்திரேலியாவுக்கு வந்து, ஆட்டங்களில் கலந்துகொண்ட பின்னர் தாம் நாடு திரும்பப்போவதில்லை என்றும் தமக்கு அரசியல் தஞ்சமளிக்குமாறும் குடிவரவு அமைச்சிடம் விண்ணப்பித்த ஐந்து வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர் ஆகியோருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இந்த விசா கிடைத்துள்ளது.
விசேட தேவைக்கு உட்பட்ட இந்த ஆப்கான் அணி வீரர்கள் அனைவரும் அந்நாட்டின் முன்னாள் இராணுவத்தினர் ஆவர்.
தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டு ஆஸ்திரேலியாவுக்கு வந்து அரசியல் தஞ்சம் கோரவில்லை என்றும் இங்கு வந்த பின்னர் இந்நாட்டின் அமைதியான சூழலும் பல்லின கலாச்சாரமும் தம்மை இங்கேயே தங்குவதற்கு தூண்டிவிட்டதாகவும் இவர்கள் கூறியுள்ளனர். சிட்னியில் தங்கியிருந்த 10 நாட்கள் தங்களை வெகுவாக மாற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அரசு தமக்கு பாதுகாப்பு விசா வழங்கியமைக்கு மிகுந்த நன்றிகளைக்கூறியுள்ள அணி வீரர்கள் தங்களது வாழ்நாளில் இந்த உதவியை மறக்கப்போவதில்லை என்றும் இந்த நாட்டுக்கு முழு விசுவாசத்தோடு வாழ்வோம் என்றும் கூறியுள்ளனர்.
தற்போது வழங்கப்பட்டிருக்கின்ற விசாவின் கீழ் குறிப்பிட்ட தஞ்சக்கோரிக்கையாளர்கள் வேலைசெய்யவும் மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்ளவும் குடும்பத்தினரை ஆஸ்திரேலியாவுக்கு அழைக்கவும் சிலர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
