நவுறு தீவில் கடந்த 2016 ஆம் ஆண்டு தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்துகொண்ட ஈரானிய அகதியின் மனைவி ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். தனது கணவரை காப்பாற்றக்கூடிய பரிபூரண வாய்ப்புக்கள் இருந்தபோதும் அதிலிருந்து தவறியதற்காக விக்டோரிய உயர் நீதிமன்றில் இந்த வழக்கை அவர் தாக்கல் செய்திருக்கிறார்.
ஈரானிலிருந்து 2013 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தீவுகளில் வந்து இறங்கிய ஈரானிய அகதி Omid Masoumali மற்றும் அவரது மனைவி ஆகியோர் 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நவுறு தீவுக்கு மாற்றப்பட்டனர். அங்கு 2014 ஆம் ஆண்டு அவர்கள் இருவரையும் ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையம் அகதிகள் என்று ஏற்றுக்கொண்டது.
2016 ஆம் ஆண்டு ஐ.நா. பிரதிநிதிகள் நவுறு தீவுக்கு விஜயம் செய்திருந்த சமயம், நீண்ட தடுப்புக்காவல் மற்றும் விஸா மறுப்பு ஆகியவற்றால் விரக்தியுற்று Omid Masoumali தனக்குத்தானே தீமூட்டி எரிந்துகொண்டார். அங்கிருந்து உடனடியாக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், 20 மணி நேரமாக ஆஸ்திரேலியாவுக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்படாமல் நவுறு தீவு வைத்தியசாலையிலேயே வைக்கப்பட்டிருந்தார். பின்னர், ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டு, சம்பவம் இடம்பெற்று 31 மணி நேரங்களுக்கு பின்னர் அவர் உயிரிழந்தார்.
இந்த மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் Omid காப்பாற்றப்படுவதற்கு 95 வீத வாய்ப்புக்கள் இருந்ததாகவும் தாமதமான மருத்துவ உதவியால்தான் நுரையீரல் பாதிப்படைந்து உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த விசாரணைகள் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்திருந்தன.
இந்த முடிவுகளின் பிரகாரம் Omid Masoumali-இன் மனைவி ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கிறார்.
