ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியநிலையில் தற்போது நவுறுவில் வாழ்ந்து வரும் சிறுவர்கள் பலர் எவ்வாறு தமது உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என்பது தொடர்பில் கூகுளில் தேடிவருவதாக, அங்கு பணிபுரியும் சுகாதார ஊழியர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதேநேரம் நவுறுவிலுள்ள சிறுவர்கள் கடும் உடல்-உளநலச்சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் உயிராபத்தில் இருப்பதாகவும் மேலும் இருவர் எச்சரித்துள்ளனர்.
இதுதொடர்பில் தமக்குக் கசிந்த ஆவணங்களின் அடிப்படையில் செய்திவெளியிட்டுள்ள ABC ஊடகம், நவுறுவிலுள்ள சிறுவர்கள், பல சந்தர்ப்பங்களில் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக இவ்வருடம் ஜுன் மாதம் 14 வயதுச் சிறுமி தன்மீது பெற்றோலை ஊற்றி தீவைக்க முயற்சித்த அதேநேரம் 10 வயதுச் சிறுவன் கூர்மையான சில உலோகப்பொருட்களை தனது உடலுக்குள் செலுத்த முற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
மூன்றாவது நாடொன்றில் குடியேற்றப்படாதநிலையில் நவுறுவில் இன்னமும் சுமார் 137 சிறுவர்கள், தமது எதிர்காலம் என்ன என்பது தெரியாமல் வாழ்ந்து வருவதாகவும், இந்தநிலை தொடருமானால் மிகமோசமான விளைவுகள் ஏற்படும் எனவும் அங்கு பணிபுரிபவர்களை மேற்கோள்காட்டி ABC செய்தி வெளியிட்டுள்ளது.