SKIP TO MAIN CONTENT

தற்கொலைக்கு முயன்ற அகதிச் சிறுமி உயிரிழக்கும் ஆபத்து: தந்தை அச்சம்!

Refugee children play a game on Nauru.
Source: World Vision

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

நவுறு தீவில் தனக்குத் தானே தீமூட்டி தற்கொலைக்கு முயன்ற 12 வயது அகதிச் சிறுமி உணவு உட்கொள்ள மறுத்துவருவதாகவும் உயிரிழப்பதற்கான எண்ணம் அவரிடம் அதிகரித்துள்ளதாகவும் அச்சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமியின் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அச்சிறுமி உடனடியாக ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தபோதிலும் ஆஸ்திரேலிய அரசு இதற்கு அனுமதி மறுத்திருந்தது.

இந்தப்பின்னணியில் உணவு, நீர், மருத்துவ உதவி போன்ற எதுவுமின்றி காணப்படும் தனது மகள் உயிரிழக்கும் அபாயம் எழுந்துள்ளதாக அச்சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க நவுறுவிலுள்ள சிறுவர்கள் மத்தியில் தற்கொலை உணர்வைத் தூண்டுவது அகதிகள் செயற்பாட்டாளர்களே என்ற நவுறு அதிபரின் கூற்றை, தாம் வன்மையாக கண்டிப்பதாக அகதிகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

பசுபிக் தீவுகளிலுள்ள நாடுகளின் தலைவர்கள் மாநாடு நாளை நவுறுவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இம்மாநாட்டில் நவுறு தடுப்பு முகாமை மூட வலியுறுத்த வேண்டுமென அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நவுறு அதிபர் Baron Divavesi Waqa, அங்குள்ள சிறுவர்களை ஆஸ்திரேலியா அழைத்துவருவதற்காகவும் அரசு மீது அழுத்தங்களை ஏற்படுத்துவதற்காகவும் அகதிகள் செயற்பாட்டாளர்கள் சிறுவர்கள் மத்தியில் தற்கொலை உணர்வைத் தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

எனினும் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள பல அமைப்புக்கள் நவுறுவில் நிலைமை மிகவும் மோசமாகக் காணப்படுவது உண்மையே என்றும் அவர்களது உடல் மற்றும் மனநிலை நினைத்துப்பார்க்க முடியாதளவு பாதிப்படைந்துள்ளதாகவும் கூறியுள்ளன.

நவுறு தீவில் தற்போது வாழ்ந்து வரும் 900 அகதிகளில் 119 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now