SKIP TO MAIN CONTENT

தற்கொலை செய்யவா திமிங்கிலங்கள் கரைக்கு வருகின்றன?

Wikimedia Commons
Source: Wikimedia Commons

3 min read

Published

By R.Sathiyanathan


Skip to article content

தஸ்மேனியாவின் மேற்குக் கடற்கரையோரமாக நூற்றுக்கணக்கான pilot whales என்ற வகை திமிங்கிலங்கள் சில வாரங்களுக்கு முன்னர் கரையொதுங்கின. நூற்றுக்கணக்கான திமிங்கிலங்கள் கடற்கரையில் கரையொதுங்கியது தொடர்பான செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது.

ஆழமற்ற கரைப்பகுதிகளில் உள்ள sand banks என்று அழைக்கப்படும் மணல் மேடுகளில் சிக்கிக்கொண்ட இவற்றால் மீண்டும் கடலுக்குச் செல்ல முடியவில்லை. இதன்காரணமாக சுமார் 500 இற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் தஸ்மேனியாவின் தலைநகர் Hobart இலிருந்து 190 கி. மீ. தொலைவிலுள்ள Macquarie Heads என்ற கடற்கரை பகுதியில் குவிந்து கிடந்தன. இவற்றுள் 400 இற்கும் அதிகமான திமிங்கிலங்கள் மறுதினமே இறந்துவிட்டன.

Pilot Whale rescue operation at Macquarie Harbour, Tasmania
Pilot Whale rescue operation at Macquarie Harbour, Tasmania. Source: AAP

இந்த திமிங்கிலங்களை கடலுக்குள் கொண்டு செல்லும் மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் சுமார் 70 திமிங்கிலங்களை பாதுகாப்பாக கடலுக்குள் கொண்டு போய்ச்சேர்த்தார்கள். இவை கடலுக்குள் ஆழமான பகுதிக்குள் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டாலும், இவை உயிர் பிழைக்குமா என்பது பற்றி நிச்சயமாகச் சொல்லமுடியாது என்று Tasmania Parks and Wildlife Service இன் பிராந்தியப் பணிப்பாளர் Nic Deka கூறினார். கரையொதுங்கிய இந்த திமிங்கிலங்கள் மிகவும் சோர்வும் பலவீனமும் அடைந்துள்ளதால் ஆழமான நீர்ப்பகுதிக்கு சென்ற பின்பும் அவை உயிரோடிருக்கும் சாத்தியம் குறைவாகவே இருப்பதாக அவர் கூறினார்.

இருந்தபோதும் Monash பல்கலைக்கழகத்தில் School of Biological Sciences துறையில் பணியாற்றும் David Hocking கருத்துத் தெரிவிக்கையில், காப்பாற்றப்பட்ட இந்த திமிங்கிலங்கள் உயிர் வாழும் வாய்ப்பும் ஏனைய குழுக்களோடு இணைந்து கொள்ளும் வாய்ப்பும் அதிகமாகவே இருப்பதாக குறிப்பிட்டார்.

இந்த pilot whales என்ற திமிங்கிலங்களை மீட்டு கடலுக்குள் கொண்டு செல்வது பெரும் சவாலாக உள்ளது. இவை ஒவ்வொன்றும் சராசரி மூன்று டன் வரை எடையுள்ளவை. ஏழு மீட்டர் நீளமானவை. இவற்றை பாதுகாப்பாக கடலுக்குள் நகர்த்துவது இலேசான காரியமல்ல. உயிரற்ற பொருட்களை க்ரேன்கள் மூலமாக நகர்த்தமுடியும். ஆனால் உயிருள்ள, எளிதில் சோர்வும் பலவீனமும் அடையக்கூடிய இந்த இராட்சத திமிங்கிலங்களை, காயம் மற்றும் உயிராபத்து எதுவுமின்றி நகர்த்தி, கடலின் ஆழமான பகுதிக்குக் கொண்டு செல்வது பகீரதப் பிரயத்தனமாகும். அத்தோடு அவை பல டன் எடையுள்ள இராட்சத உயிரினங்கள் என்றவகையில், மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளோரை அது தாக்கும் அபாயமும் உண்டு. இருந்தபோதும் அவை குறிப்பிடக்கூடிய அளவுக்கு அமைதியாகவே இருந்ததாகவும், தம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் என்ன செய்ய முயற்ச்சிக்கிறார்கள் என்பதுபற்றி அவை உணர்ந்துகொண்டதுபோல செயல்பட்டதாகவும் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த மீனவரான Tom Mouney குறிப்பிட்டார்.

A huge rescue mission to save some 270 pilot whales stranded off Tasmania's remote west coast is underway.
A huge rescue mission to save some 270 pilot whales stranded off Tasmania's remote west coast is underway. Source: Tasmania Police

சுமார் 60 தன்னார்வலர்கள் இந்த மீட்புப்பணியில் ஈடுபட்டார்கள். Slings என்ற தொட்டில்கள் அல்லது தூளிகள் வடிவில் கட்டப்பட்ட உறுதியான துணிகளில் திமிங்கிலத்தைச் சுற்றி கடலுக்குள் இவை இழுத்துச்செல்லப்பட்டன. நீரினுள் அவை முழுமையாக மூழ்கிய பின்னர் அவை ஆழமான பகுதிகளுக்குச்செல்ல அவற்றை வழிப்படுத்தினார்கள். இவ்வாறு 70 திமிங்கிலங்களைக் காப்பாற்றியது பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

புவியியல் ரீதியாக இக்கடற்கரைப்பகுதி மிகவும் சவாலான பகுதியென்றும் கடல்சீற்றம் காரணமாக மீட்புப் பணிகள் பலமுறை தடைப்பட்டதாகவும் கூறப்பட்டது. காப்பாற்றி கடலுக்குள் கொண்டு சென்று விடப்பட்ட திமிங்கிலங்களுள் சிலவற்றை இராட்சத கடல் அலைகள் மீண்டும் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மிதப்பதற்கு போதுமான நீர் இல்லாத நிலையில் தங்கள் உடலின் எடைகாரணமாகவே இவை நசுக்கப்பட்டு உயிர் இழப்பதாக Southern Cross University இன் திமிங்கிலங்கள் தொடர்பான ஆராய்சிப்பகுதியின் பேராசிரியர் Peter Harrison கூறியிருக்கிறார்.

A pod of whales, believed to be pilot whales
Rescuers believe a third of about 270 whales stranded off Tasmania have already died. (AAP) Source: AAP

சுமார் 350 திமிங்கிலங்கள் இறந்துள்ள நிலையில் இவற்றின் உடல்களை அப்புறப்படுத்துவதும் மற்றொரு பாரிய பணியாகும். இது பற்றி கருத்து தெரிவித்த parks and wildlife service ஐச் சேர்நத Nic Deka, இந்த திமிங்கிலத்தின் உடல்கள் பழுதடையத்தொடங்கியதும் உப்பத்தொடங்கும் என்றும் அதன்பின் அவற்றை மிதக்கவிட்டு கடலுக்குள் கொண்டுசெல்வது இலேசாக இருக்கும் என்றும் அங்கு அவை கடலுக்குள் போடப்படும் என்றும் கூறினார்.

இந்த இறந்த உடல்கள் oceans ecosystem என்ற ஆழ்கடல் வாழ்வியல் சுழற்சிக்கு பெரு ஆதாரமாக இருக்குமென்றும் கடல்வாழ் நுண்ணுயிர்களுக்கும் ஏனைய உயிர்களுக்கும் தேவையான nutrient- நுண்ணூட்டத்திற்கு, பங்களிப்பாக இருக்கும் என்றும் David Hocking தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவைப்பொறுத்த அளவில் திமிங்கிலங்கள் கரையொதுங்குவது பல இடங்களில் இடம்பெற்றுவந்தாலும் சுமார் 80 சதவீதமான திமிங்கிலங்கள் தஸ்மேனிய கடற்கரைப்பகுதியிலும் குறிப்பாக Macquarie Heads பகுதியிலுமேயே கரை ஒதுங்குவதாக சொல்லப்படுகிறது. 1935 இல் 294 pilot whales வகை திமிங்கிலங்கள் அங்கு கரையொதுங்கின. 1996 இல் 320 திமிங்கிலங்களும் 2009 இல் 200 திமிங்கிலங்களும் அங்கு கரையொதுங்கியுள்ளன. இப்போது என்றுமில்லாவகையில் சுமார் 500 திமிங்கிலங்கள் sand bank என்ற மணல் திட்டுக்குள் சிக்கிக்கொண்டன. 2011 இல் 20 sperm whales என்ற வகை திமிங்கிலங்கள் இந்த Macquarie Head பகுதியில் சிக்கிக்கொண்டன. அவற்றுள் 16 திமிங்கிலங்கள் காப்பாற்றப்பட்டன.

A pod of whales, believed to be pilot whales, that have become stranded on a sandbar at Macquarie Harbour, near Strahan, on Tasmania's west coast.
Source: Tasmania Police

சில கடற்கரையின் அமைப்பு- ஆழமான பகுதிகளும் ஆழம் குறைந்த பகுதிகளும் அடுத்தடுத்து இருப்பது - திமிங்கிலங்கள் கரையொதுங்குவதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டாலும் கூட இரைக்காக மீன்களை துரத்திவரும்போது, சூழலை மறந்து இந்த திமிங்கிலங்கள், மணல் திட்டுகளைநோக்கி வந்தடைந்திருக்கலாம் என்றும் அவை கூட்டமாகவே பயணிப்பதால் ஒரு தனி திமிங்கிலத்தால் தவறான வழிகாட்டுதலுக்கு உட்பட்டிருக்கக் கூடும் என்றும் ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அத்துடன் கடற்கரை ஓரமாக மனிதர்களின் செயல்பாடுகள் காரணமாக ஏற்படக்கூடிய மோட்டார் படகுகளின் மற்றும் கப்பல்களின் ஒலிகள் என்பனவும் திமிங்கிலத்தின் lunar sensors என்ற உணரிகளுக்கு குழப்பமான சமிக்ஞைகளை அனுப்பவதால் திமிங்கிலங்கள் குழப்பம் அடைந்திருக்க க் கூடும் என்றும் சொல்லப்படுகின்றது.

மேலும் திமிங்கிலங்கள் தற்கொலை செய்யவே கரைக்கு வருகின்றன என்று சிலர் நம்பினாலும் அதற்கான எந்தவித ஆதாரங்களையும் கடல் விலங்கினங்கள் தொடர்பான நிபுணர்கள் இதுவரை கண்டறியவில்லை. ஆனால் ஏன் இவை கரைக்கு வந்து தங்களது முடிவை தேடிக்கொள்கின்றன என்பது புதிராகவே இருப்பதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த pilot whales என்ற திமிங்கிலங்களின் எண்ணிக்கை உலகில் அழிந்து வருவதாக கருதப்படவில்லை. இந்த வகை pilot whales கள் அழிந்துவரும் உயிரிகளின் வரிசையில்(endangered species) வரவில்லை என்றும் இவற்றின் எண்ணிக்கை பற்றி திட்டவட்டமாகச் சொல்லமுடியாவிட்டாலும் சுமார் பத்து லட்சம் Long finned pilot whale-களும் இரண்டு லட்சம் short finned pilot whale-களும் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now