சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றவாளி என இனங்காணப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் மிக மூத்த கத்தோலிக்க கார்டினல் George Pell, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மெல்பேர்ன் St.Patricks தேவாலயத்தில் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன் இரு 13 வயது சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில், George Pell நீதிமன்றினால் 5 பிரிவுகளின் கீழ் குற்றவாளி என இனங்காணப்பட்டுள்ள நிலையில் இவருக்கான தண்டனை என்னவென்பது எதிர்வரும் மார்ச் 13ம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
இன்று நடைபெற்ற தண்டனைக்கு முன்பான நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து George Pell-க்கான பிணை விண்ணப்பம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அவரது சட்டத்தரணிகள் இத்திட்டத்தைக் கைவிட்டதையடுத்து அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இன்றைய விசாரணைகளின் போது நீதிமன்றத்துக்கு வெளியே கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் George Pell-க்கு எதிராக கோஷமெழுப்பி தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
இது ஒருபுறமிருக்க தான் நிரபராதி என நிரூபிக்கும் வரைக்கும் George Pell வத்திக்கானின் தலைமை பொருளாதார ஆலோசகராக செயற்படமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் தேவாலயத்தில் Mass நடத்துவதற்கும் இளையோரைச் சந்திப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
