ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலுள்ள பலருக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படாவிட்டால், அங்கு பலர் உயிரிழக்கும் நிலை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு மனுஸ் தடுப்பு முகாமல் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் கண்களில் காயமடைந்த ஈரான் அகதி ஒருவரின் ஒருபக்கப் பார்வை இழக்கப்பட்டுவிட்டதாகவும் அவரது மறு கண்ணிலும் பார்வையிழப்பு ஏற்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக சிகிச்சைகளைப் பெறுவதற்காக அவர் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென்றபோதிலும் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதேபோல் எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படும் ஒருவருக்கு வெறுமனே Panadol மற்றும் Bandage மாத்திரமே வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக கடல்கடந்த தடுப்பு முகாமிலுள்ளவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் சரியான நேரத்தில் வழங்கப்படாவிட்டால் பலர் அங்கு உயிரிழப்பதைத் தடுக்க முடியாதென ஆஸ்திரேலியாவிலுள்ள மருத்துவர்கள் பலர் எச்சரித்துள்ளனர்.
