மனுஸ் தீவு தடுப்பு முகாமிலுள்ள, தற்போதைய மற்றும் முன்னாள் புகலிடக்கோரிக்கையாளர்கள் 1,400 பேருக்கு, ஆஸ்திரேலிய அரசு வழங்க முன்வந்த 70 மில்லியன் டொலர் நஷ்டஈடு ஒப்பந்தத்தை, விக்டோரியா உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
குறித்த தீவில் 2012 தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை தடுத்து வைக்கப்பட்ட 1383 ஆண்கள், அங்கு தாம் நடத்தப்பட்ட முறை தொடர்பில், ஆஸ்திரேலிய குடிவரவுத்திணைக்களத்திற்கெதிராக class action எனப்படும் கூட்டு சட்டநடவடிக்கை எடுத்திருந்தனர்.
குறித்த வழக்கு விக்டோரிய நீதிமன்றில் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே, மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு சுமார் 70 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களை இழப்பீடாக வழங்குவதற்கு அரசு முன்வந்திருந்த நிலையில், இதற்கான அனுமதி நீதிமன்றத்தினால் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய சட்ட வரலாற்றிலேயே மனித உரிமைகளை அடிப்படையாக வைத்து நஷ்டஈடு வழங்கப்படும், முதலாவது மிகப்பெரிய சம்பவமாக இது அமைகின்றது.
இதேவேளை படகு மூலம் மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல் நடவடிக்கையினால் ஆஸ்திரேலிய கடற்பரப்பில் இடம்பெறும் ஆபத்தான பயணங்களை தடுக்கும் நோக்கத்திலேயே, புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக ஆஸ்திரேலியா அரசு தெரிவித்திருந்தது.
எனினும் ஆஸ்திரேலியாவின் கொள்கை உள்நாட்டில் மாத்திரமன்றி, ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச தரப்பினாலும் கடுமையாக விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
