இப்பொழுதுதான் கடந்த வருட Tax return - வருமான வரி கணக்கீடு செய்தது போலிருக்கும். ஆனால் அதற்கிடையில் 2015-2016க்கான Tax return செய்வதற்கான காலம் வந்துவிட்டது.
பொதுவாக ஆஸ்திரேலியாவில் வருடமொன்றுக்கு $18200 டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டும் அனைவரும் Tax return செய்ய வேண்டியது அவசியமாகும். Centrelink இடமிருந்து பணம் பெறுபவர்களும் முதலீடுகள் மூலம் வருமானம் பெறுபவர்களும் கூட இதற்குள் அடங்குகின்றனர்.
இதேவேளை புதிதாக வேலை செய்ய ஆரம்பிப்பவர்கள் ஆஸ்திரேலிய வரித்திணைக்களத்திடமிருந்து உங்களுக்கான TFN- வரி ஆவண இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள மறக்கக்கூடாது.

Source: Public Domain
உங்களுக்கான Tax return-ஐ ஒரு Tax agent - முகவர் ஊடாகவோ அல்லது வரித்திணைக்களத்தின் myTax ஊடாகவோ செய்து கொள்ளலாம். முகவர் ஊடாக செய்வதாயின் அவர் பதிவுசெய்யப்பட்ட முகவரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
myTax ஊடாக செய்கிறீர்கள் என்றால் அதற்கு myGov என்ற இணையக் கணக்கு உங்களிடம் இருக்க வேண்டும்.

Source: Getty image
உங்களது வருவாய் கணக்கீடுகள் சிக்கலானதல்லவென்றால் myTax ஊடாக Tax return செய்துகொள்வது மிகவும் சுலபமானதாகும்.
இதேவேளை உங்கள் தொழிலுக்காக செலவிட்ட சில செலவுகளை வருமானத்திலிருந்து கழித்துக்கொள்ள முடியும். அப்படி என்னென்னவற்றையெல்லாம் கழிக்கலாம் என்ற விபரங்கள் ATO - ஆஸ்திரேலிய வரித்திணைக்களத்தின் இணையத்தளத்தில் இருக்கின்றன. ATO வின் myDeductions என்ற App-ஐ பயன்படுத்துவதன் மூலம் இதற்கான தரவுகளை பேணமுடியும்.
உங்களது செலவுகளுக்கான ஆதாரங்களையும் நீங்கள் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். பொய்யாக காட்டப்படும் செலவுகளை வரித் திணைக்களத்தால் இலகுவாக கண்டுபிடித்துவிட முடியும். அப்படியான சந்தர்ப்பத்தில் தண்டப்பணம் செலுத்த நேரிடும் என்பதுடன் அது தண்டனைக்குரிய குற்றமுமாகும்.

Source: Getty Images.jpg
Medicare Levy, Medicare Levy Surcharge ஆகியவற்றை நீங்கள் செலுத்த வேண்டுமா இல்லையா என்பதையும் உங்களது Tax return முடிவு செய்கிறது.
குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலை பார்த்தல், முதலீடுகள் மூலம் வருமானம் ஈட்டுதல் போன்றவை உங்களது வரிக்கடமைகள், அரச மானியங்கள் மற்றும் சலுகைகளில் தாக்கம் செலுத்தும் என்பதையும் ஞாபகத்தில் கொள்ளல் வேண்டும்.

Source: Getty image
இதேவேளை ஏதோவொரு காரணத்தினால் இந்த வருடம் நீங்கள் Tax return செய்ய வேண்டியதில்லை என்றால் அதை வரித்திணைக்களத்திற்கு அறிவிப்பது அவசியமாகும்.
ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்கள் Tax return செய்வதற்குத் தேவையான உதவிகள் பல வழிகளில் கிடைக்கிறது. இலவச வரி ஆலோசனை வசதிகள், சமூக பிரிதிநிதிகளிடமிருந்து உதவிகள் என பல வழிகளில் இந்த உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த வருடத்திற்குரிய Tax return விண்ணப்பங்களை நீங்கள் 31.10.2016 க்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். முகவர் ஒருவரைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் எப்போது தாக்கல் செய்யப்போகிறீர்கள் என்பதை அவருடன் கலந்து பேச வேண்டும்.

Source: Getty Images.jpg
எப்படியிருப்பினும் குறித்த காலப்பகுதிக்குள் Tax return விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காதவர்கள் தண்டப்பணம் மற்றும் வட்டி போன்றவற்றைச் செலுத்த நேரிடும்.
Tax return தொடர்பிலான மேலதிக விபரங்களை தமிழ் மொழியில் பெறுவதற்கு 131450 என்ற இலக்கத்தை அழைத்து மொழிபெயர்ப்பு வசதியைக் கோருங்கள்