NSW மாநில டாக்ஸி ஓட்டுநர்கள் பயணிகளை ஏற்றும்போது மீட்டர்களை இயக்க மறுத்து, அதற்குப் பதிலாக கட்டணத்தை குறைப்பதாகவோ, அல்லது குறிப்பிட்ட தொகையொன்றைத் தருமாறு பேரம் பேசினால், அவர்களுக்கு 1,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் பல சிட்னிவாசிகள் டாக்ஸிகளை நம்பிப் பயணம்செய்வதாகவும், இவர்களை டாக்ஸி ஓட்டுநர்கள் ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதேவேளை சிட்னியில் Vivid ஒளித்திருவிழாக் காலத்தில் அதிகளவானோர் டாக்ஸிகளைப் பயன்படுத்துவதாகவும், இக்காலப்பகுதியில் டாக்ஸி ஓட்டுநர்கள் உரிய முறையில் செயற்படுகிறார்களா என்பதைக் கண்காணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியில் இருப்பார்கள் எனவும் போக்குவரத்து அமைச்சர் Jo Haylen தெரிவித்தார்.
தங்கள் மீட்டர்களை இயக்க மறுப்பது, அல்லது வாடிக்கையாளரிடம் பேரம் பேசுதல் போன்றவை தொடர்பில் பிடிபட்ட டாக்ஸி ஓட்டுநர்களுக்கான on-the-spot அபராதத்தை 300 டொலர்களிலிருந்து 1,000 டொலர்களாக நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு உயர்த்துகிறது.
மீட்டரை இயக்க மறுக்கும் டாக்ஸி ஓட்டுநர்கள் வாடிக்கையாளரிடம் குறிப்பிட்ட தொகையை கேட்கிறார்கள் எனவும், இது சட்டவிரோதமானது என்றும் அவர் கூறினார்.
இத்தகைய ஓட்டுநர்களைச் சந்திக்கும் பயணிகள் அந்த ஓட்டுநர் தொடர்பில் மாநிலத்தின் 24 மணி நேர டாக்ஸி ஹாட்லைனுக்கு(1800 500 410) தெரிவிக்குமாறு அமைச்சர் Jo Haylen ஊக்குவித்துள்ளார்.
இந்த முறைப்பாடுகள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
ஆனால் இக்குற்றத்திற்கான தண்டனையாக 1,200 டொலர்கள் அபராதம் விதிக்க வேண்டும் என்றும், மூன்று முறை பிடிபட்ட ஓட்டுனர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் மாநில எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.
SBS தமிழ்ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல்வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
