விக்டோரிய மாநிலத்தில் வசிப்பதற்கு வருகின்றவர்கள் தங்களது வெளிநாட்டு/வேறு மாநில லைசன்ஸ்-வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரத்தை விக்டோரிய மாநில வாகன ஒட்டுனர் அனுமதிப்பத்திரமாக மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலையடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் சேவைகளை வழங்குவதிலுள்ள சிக்கல்கள் போன்றவற்றைக் கருத்திற்கொண்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் 29 திகதி வரை இக்கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைமுறைக்கு வந்த விக்டோரிய சாலைவிதிகளின்படி, விக்டோரியாவில் வசிப்பதற்கு வருபவர்கள் (மாணவர் விசா,தற்காலிக விசா உட்பட), ஆறு மாத காலத்துக்குள் தங்களது வெளிநாட்டு/வேறு மாநில வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரத்தை விக்டோரிய ஆவணமாக மாற்றிக்கொள்ளவேண்டும்.
இதையடுத்து இன்னமும் வெளிநாட்டு/வேறு மாநில ஓட்டுனர் அனுமதி பத்திரத்தை பயன்படுத்திவருபவர்கள், ஒக்டோபர் 29 ஆம் திகதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அதாவது இவ்வாண்டு ஏப்ரல் 29க்குள் தங்களது வாகன ஓட்டுனர் அனுமதிப் பத்திரத்தை விக்டோரிய வாகன ஒட்டுனர் அனுமதிப் பத்திரமாக மாற்றிக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்டது.
எனினும் தற்போது இக்கால அவகாசம் ஒரு ஆண்டால் நீடிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
