பல்வேறு முறைகேடுகள் - குற்றங்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய 36 ஆயிரம் இந்தியர்களின் விவரங்கள் ஆஸ்திரேலிய அரசின் Movement Alert பட்டியலில் உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
இந்த 36 ஆயிரம் இந்தியர்களும் ஆஸ்திரேலிய சமூகத்துக்கு பிரச்சினையானவர்கள் என்ற பட்டியலின் கீழ் உள்ளார்கள் என்றும் இந்தப்பட்டியல் ஆஸ்திரேலியா குடிவரவு அதிகாரிகள் விசா விண்ணப்பம் குறித்த முடிவுகளை எடுப்பதற்கு உதவியாக பேணப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய அரசு பேணிவரும் இந்தப்பட்டியலில் உலகளாவிய ரீதியில் சுமார் ஏழு லட்சம் பேர் உள்ளார்கள் என்றும் இந்தியர்கள் மாத்திரம் 36 ஆயிரத்து 168 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்பட்டியலில் உள்ள இந்தியர்களில் 9009 பேர் கடனை செலுத்தாமல் நாட்டைவிட்டு தப்பிச்சென்றவர்கள், 3286 பேர் விசாக்காலாம் முடிந்தபின்னரும் தங்கியிருந்தவர்கள் என்றும் இரண்டாயிரம் பேரளவில் குடிவரவு குற்றங்களினால் நாட்டுக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட 36 ஆயிரத்து 168 இந்தியர்களில் யாராவது ஒருவர் ஆஸ்திரேலியா வருவதற்கு விசாவுக்கு விண்ணப்பித்தாலே உடனடியாக அது குடிவரவு அமைச்சுக்கு சிவப்பு சமிக்ஞையை காண்பிக்கும் என்று ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
