ஆஸ்திரேலிய தலைநகர் கன்பரா அமைந்துள்ள ACT பிராந்தியத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட எவரும் தற்போது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த இறுதி நபரும் குணமடைந்துவிட்டதையடுத்து இவ் வைரஸின் பிடியிலிருந்து மீண்ட முதல் பிராந்தியமாக ACT திகழ்வதாக குறிப்பிடப்படுகிறது.
ACT பிராந்தியத்தில் மொத்தம் 106 பேருக்கு COVID-19 தொற்று ஏற்பட்டது. இதில் 3 பேர் மரணமடைந்தனர். 103 பேர் குணமடைந்துவிட்டனர்.
இதையடுத்து புதிதாக எவரும் இனங்காணப்படவில்லை என்றும் தற்போதைய தரவுகளின்படி ACT பிராந்தியம் கொரோனா வைரஸ் பரவலை இல்லாதொழித்துவிட்டதாகவே கருதமுடியும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை ACT பிராந்தியத்தில் தற்போது எவருக்கும் கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்படவில்லை என்ற போதிலும் இதற்கான சோதனைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், சிறியதாக நோய் அறிகுறிகள் தென்பட்டாலும் தம்மைப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுமாறும் ACT தலைமை மருத்துவ அதிகாரி Dr Kerryn Coleman வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் அங்கு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா முழுவதும் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 6753 பேரில் 5685 பேர் குணமடைந்துவிட்டனர். 38 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். நாடு முழுவதும் 91 பேர் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirusஎன்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
