ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுபவர்களுக்கென நடத்தப்படும் தேர்வில் தவறு ஒன்று இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடியுரிமை பெறுவதற்கான தேர்வினை எழுதும் ஒருவர், தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கான சரியான பதிலை ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கும் பதில்களிலிருந்து தெரிவுசெய்யவேண்டும்.
அந்தவகையில் இத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கான பதில்கள் அனைத்தும் தவறாகவே இருந்ததாக, இவ்வாரம் தேர்வினை எழுதிய பிரிட்டிஷ் பெண்மணி ஒருவர் SBS-இடம் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் மொத்த சனத்தொகை எவ்வளவு என்பதுதான் அந்தக் கேள்வி. இதற்குரிய பதில்களாக 18 மில்லியன், 22 மில்லியன் மற்றும் 30 மில்லியன் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் ஆஸ்திரேலியாவின் தற்போதைய சனத்தொகை 24 மில்லியனாக காணப்படும் நிலையில், குறித்த கேள்வியில் இவ்வெண்ணிக்கை வழங்கப்பட்டிருக்கவில்லை.
உடனடியாக அப்பெண்மணி அங்கிருந்த அதிகாரியிடம் கேள்வியில் தவறு இருப்பதாகவும் சரியான பதிலைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு அதில் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கு அந்த அதிகாரி, சரியான பதில் 22 மில்லியன் எனக் குறிப்பிட்டதுடன் ஏற்கனவே கணினியில் பதிவேற்றப்பட்ட தரவுகளை மாற்றுவது மிகவும் கடினம் எனக் கூறியதாக அப்பெண்மணி தெரிவித்தார்.
குடியுரிமை பெறுவதற்கான தேர்வில் கேட்கப்படும் 20 கேள்விகளில் 15 கேள்விகளுக்கு சரியான பதில்களை வழங்க வேண்டியுள்ள பின்னணியில், இப்படியான தவறுகளால் எத்தனைபேர் தேர்வில் தோற்றிருக்கக்கூடுமென அப்பெண்மணி கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பில் உள்துறை அமைச்சைத் தொடர்புகொண்டு கேட்டதற்கு, குடியுரிமைத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் இரகசியமாகப் பேணப்படுவதாகவும் அதன் உள்ளடக்கம் தொடர்பில் உடனடியாக கருத்துக்கூறுவது சரியாகாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம் கடந்த ஜுலை 2017 முதல் 30 ஏப்ரல் 2018 வரையான காலப்பகுதிக்குள் குடியுரிமை பெறுவதற்கான தேர்வினை எழுதியவர்களில் 1,597 பேர் தோல்வியடைந்ததாகவும், அதில் 5.5 வீதமானவர்கள் ஒரு புள்ளியால் தோற்றதாகவும் உள்துறை அமைச்சரின் பேச்சாளர் தெரிவித்தார்.
Share
