SKIP TO MAIN CONTENT

அரசசொத்தை மோசடிசெய்ய சதித்திட்டம்? இந்தியர் உட்பட மூவர் கன்பராவில் கைது!

wikimedia
Source: Wikimedia

1 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலிய நிதித்திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த ஒப்பந்தங்களில் ஊழல் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்தியர் உட்பட மூவர் தலைநகர் கன்பராவில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மிகச்சிக்கலான இந்த வழக்கு தொடர்பில் நேற்று வியாழக்கிழமை இம்மூவரும் கைதுசெய்யப்படும்போது கன்பராவின் பல்வேறு இடங்களிலும் ஆஸ்திரேலிய பெடரல் பொலீஸார் ஒரேநேரத்தில்  தேடுதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்த முழுமையான விவரங்கள் எதுவும் இப்போதைக்கு வெளியிடப்படாதபோதும் - குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவரும் கன்பராவிலுள்ள அரச ஊழியர்கள் என்றும், நிதித்திணைக்களத்தின் சார்பிலான தகவல்தொழில்நுட்பத்துறை ஒப்பந்தங்களை வெளியாட்கள் பெற்றுக்கொள்வதற்கு - தேவையான - உள்வீட்டு - விவரங்களை வழங்கினார்கள் என்றும் இதற்காக இம்மூவரும் பணம் வாங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு முதல் இந்த மாதம் - 2020 ஜூன் - வரைக்கும் இவர்கள் தங்களுக்கு விரும்பியவர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கி அதற்கு பணம் பெற்றார்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ள பொலீஸார், அரச ஊழியர்களான இவர்கள் மூவரும் அரசாங்க சொத்தை மோசடி செய்வதற்கு சதித்திட்டம் தீட்டினார்கள் என்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கின்றனர்.

நிதித்திணைக்களத்திலிருந்து பொலீஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை ACT மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றபின்னர், இவர்களுக்கு பிணை வழங்குவதற்கு நீதிபதி அனுமதித்துள்ளபோதும் அதற்கு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளார்.

மூவரும் வாரத்தில் மூன்று தடவைகள் பொலீஸ் நிலையத்தில் முன்னிலையாகி கைச்சாத்திடவேண்டும், ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளக்கூடாது போன்ற கடும் கட்டுப்பாடுகள் இவர்களுக்கு விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதுடன், அடுத்து ஜூலையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now