நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் பல்வேறு இடங்களிலும் காட்டுத்தீ பரவிவரும் நிலையில் Total fire ban-தீ மூட்டுவதற்கான தடை உத்தரவை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் மூவர் பொலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தடையை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட பின்னணியில் நேற்று இவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.
இம்மூவரில் மின் கம்பிகளின் மூலம் தீ ஏற்படுவதற்கு காரணமானவர் என்ற குற்றத்தின் பேரில் ஒருவரும் குப்பைக்கு தீ மூட்டினார் என்ற குற்றத்தின் பேரில் இன்னொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.
குப்பை தீ மூட்டப்பட்ட இடத்துக்கு 40 மீற்றர் தொலைவிலிருந்த குடிசையொன்றில் தீயை மேலும் பரவச்செய்யக்கூடிய இரசாயன திரவங்கள் மற்றும் பெற்றோல் போன்ற எரிபொருட்கள் காணப்பட்டதாக பொலீஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. மற்றையவரை ஜனவரி மாதம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, Wollongong பகுதியில் பரசூட்டில் வந்து மரங்களின் மீது வீழ்ந்த வயதானவர் ஒருவரை மீட்பதற்காக சென்றபோது அந்தக்காட்டுப்பகுதியில் தீ மூட்டிக்கொண்டிருந்த 20 வயது இளைஞரை கைது செய்த பொலீஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருக்கிறார்கள். அவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.