Red planet சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதற்கு மூன்று நாடுகள் சமகாலத்தில் விண்கலங்களை அனுப்புகின்றன.
ஜூலை மாதம் நடுப்பகுதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதிவரை, அதாவது சுமார் ஒருமாத காலப்பகுதியில் பூமியிலிருந்து செவ்வாய்க்கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்ப,மிகவும் சாதகமான காலப்பகுதியாகப் பார்க்கப்படுகிறது. இந்தக்காலப்பகுதியில் பூமியும் செவ்வாய்க் கிரகமும் ஒன்றையொன்று நெருங்கி வருவதால் இவை இரண்டுக்கும் இடையேயான இடைவெளி குறைகிறது என்றும் இதனால் பயணிக்கவேண்டிய தூரமும் குறைகிறது என்றும் சொல்கிறார்கள்.
ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இம்முறை மூன்று நாடுகள் சமகாலத்தில் விண்கலங்களை அனுப்ப முனைந்திருக்கின்றன.
இவற்றுள் அமெரிக்கா இதற்குமுன்னரும் பல தடவைகள் விண்கலங்களை செவ்வ்வாய்க்கிரகத்திற்கு அனுப்பியிருக்கிறது. உண்மையில் செவ்வாய்க்கிரகத்திற்கு அமெரிக்கா பத்தாவது தடவையாக அனுப்பும் விண்கலம் இது. சீனா இதற்கு முன்னர் செவ்வாய்க்கிரகத்தை ஆராய, விண்கலத்தை அனுப்பியதில்லை. ஆனால், சீனா இரண்டு விண்கலங்களை இதற்கு முன்னர் சந்திரனுக்கு அனுப்பியுள்ளது. இந்த இரண்டு நாடுகளும் தவிர மூன்றாவது நாடான United Arab Emirates என்ற ஐக்கிய அரபு அமீரகம், இதற்குமுன்னர் விண்வெளி ஆராய்ச்சிக்கு விண்கலங்களை அனுப்பியதில்லை என்றபோதும் அதுவும் இம்முறை இந்த ஆராய்ச்சியில் இணந்து கொண்டுள்ளது.நேற்று வெற்றிகரமாக United Arab Emirates என்ற ஐக்கிய அரபு அமீரகம் விண்கலத்தை அனுப்பியுள்ளது.

இந்த மூன்று விண்கலங்களும் அடுத்தவருட முற்பகுதியில் செவ்வாய்க்கிரகத்தைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இந்த ஆய்வில் இறங்கியிருப்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, Flinders பல்கலைக்கழக archaeologist, Alice Gorman, ‘மேலும் பல நாடுகள் இந்த ஆய்வில் கலந்துகொள்வதன்காரணமாக வெற்றி வாய்ப்பு மேலும் அதிகரிக்கும். பெறப்படும் தகவல்கள் களஞ்சியப்படுத்தப்படும்’ என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்கா இம்முறை அனுப்பும் விண்கலம் பற்றிய விவரங்கள் என்ன?
அமெரிக்கா 1975 தொடக்கம் செவ்வாய்க்கிரக ஆய்வில் ஈடுபட்டிருக்கிறது. இதற்கு முன்னர் ஒன்பது robot களை அங்கு வெற்றிகரமாக இறக்கியிருக்கிறது. இம்முறை Perseverance என்ற rover ஊர்தியை, அமெரிக்கா செவ்வாய்க்கிரகத்தில் இறக்கவிருக்கிறது. அமெரிக்கா இதற்குமுன்னர் அங்கு இறக்கியுள்ள, Curiosity மற்றும் Mars Insight ஆகிய ஊர்திகளோடு இந்த Perseverance உம் இணைந்து செயல்படும். ஆனால் இந்த ஊர்தி முதன்முறையாக, ‘செவ்வாய்கிரகத்தில் இதற்கு முன்னர் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளனவா’ என்று ஆய்வு செய்யும் என்று NASA வில் Jet Propulsion Laboratory யில் பணியாற்றுபவரும் ஆஸ்திரேலிய புவியியலாளருமான (geologist) Abigail Allwood தெரிவித்திருக்கிறார். அமெரிக்கா இதற்கு முன்னர் செவ்வாயில் தரையிறக்கிய ஊர்திகள், செவ்வாயில் நீர் இருக்கிறதா, அங்கு உயிர்கள் வாழக்கூடிய சூழல் உள்ளதா என்பதையே ஆய்வு செய்தன என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

இதற்கு முன்னர் அனுப்ப ப்பட்ட rover என்ற ஊரதிகளிலிருந்து, இந்த முறை அமெரிக்கா அனுப்பும் Perseverance என்ற ஊர்தி எந்த வித்த்தில் வேறுபட்டது?
இதற்கு முன் அனுப்பப் பட்ட Curiosity என்ற ஊர்தியை ஒத்ததுதான் இதுவும் என்பதோடு, Curiosity பயன்படுத்திய terrain technology என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பாக இது செவ்வாயின் மேற்பரப்பில், Jezero Crater என்ற பள்ளத்தாக்கில் தரையிறங்கும். பூகர்ப்பவியலை (Geology) துல்லியமாகப் பரிசோதனை செய்ய உதவும் கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளதோடு, மேற்பரப்பில் துளையிட்டு sediment sample (வண்டல் மாதிரிகள்)களைத்திரட்ட உதவும் ( drill) துளையிடும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த sample கள் 2026 இல்தான் பூமிக்கு வந்து சேரும் என்கிறார்கள்.
ஆனால் இந்த முறை அனுப்பும் ஊர்தியிலுள்ள பிரதான வேறுபாடு என்னவென்றால், இது முதன்முறையாக ஆளில்லாமல் பறக்கக்கூடிய கூடிய சிறு பரீட்சார்த்த helicopter ஒன்றையும் சுமந்து செல்கிறது என்பதுதான். இது வெற்றிகரமாகப் பறக்கக் கூடியது என்பது உறுதியானால் இத்தகைய helicopter களை mars exploration என்ற திட்டத்திற்கு, சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் . இதைத்தவிர, செவ்வாய்க்கிரகத்தில் ஒரு ( base) தளம் அமைப்பதற்கான ஆயத்தப்பணிகளையும் Perseverence செய்யும்.

சீனா எந்த மாதிரியான விண்கலத்தை அனுப்பவிருக்கிறது?
சீனா அனுப்பும் விண்கலமும் மூன்று பகுதிகளைக்கொண்டது. Orbiter என்ற சுற்றும் கலம், lander என்ற இறங்கு கலம், rover என்ற ஊர்தி ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டது. இந்த விண்கலத்தின் பெயர், Tianwen 1 என்பதாகும். இது சீனாவின் இரண்டாவது முயற்சி.
2012 இல் ரஷ்ய விண்கலத்துடன் இணைந்து சீனா அனுப்ப முனைந்த orbiter என்ற கலம் தோல்வியடைந்தது. முழு விண்கலமும் பூமியில் வீழ்ந்து சிதறியது. இப்போது சீனா, தான் சுயமாக அபிவிருத்தி செய்து சந்திரனில் இரண்டு முறை தரையிறங்க உதவிய சொந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, செவ்வாய்க் கிரகத்திற்கு விண்கலத்தை இம்முறை அனுப்பவிருக்கிறது. சீனாவின் விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாகத் தரையிறங்கினால், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, செவ்வாயில் தனது விண்கலத்தைத் தரையிறக்கிய மூன்றாவது நாடு என்ற பெருமையைச் சீனா பெறும்.
செவ்வாயில் தரையிறங்குவது, சந்திரனில் தரையிறங்குவதைவிட சவாலானது. செவ்வாயின் வளிமண்டலம் (thin) மெல்லியது என்பதோடு, தரையை அண்மிக்கும்போது, இறங்குகலத்தின் வேகத்தைக் குறைத்து கட்டுப்படுத்துவது மிக க்கடினமாகும். ஆகவே parachute தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இறங் கும்போது timing என்ற காலப்பிரமாணம் மிகப் பிரதானமாகிறது. சீனாவின் Tianwen 1 விண்கலம் செவ்வாயில் Utopia Planitia என்ற இடத்தில் தரையிறங்கும் என்று எதிர்பாரக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் என்ன மாதிரியான விண்கலத்தை அனுப்பியுள்ளது?
ஐக்கிய அரபு அமீரகம் விண்வெளி ஆய்வுக்கு விண்கலமொன்றை அனுப்பியுள்ள முதலாவது இஸ்லாமிய நாடாகும். இந்த விண்கலத்தின் பெயர் ‘Al Amal’ அல்லது ஆங்கிலத்தில் Hope என்பதாகும். இது ஒரு orbiter சுற்றும்கலம் மட்டுமே. இது செவ்வாயின் சுற்றுவட்டத்தில், அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இந்திய orbiterகளுடன், இணைந்து செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும். ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்பட்ட ஐம்பதாவது வருடத்தை நினைவுகூறும்விதமாக அனுப்பப்பட்டுள்ள இந்த orbiter, ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கத்துவ நாடுகளின் விருப்பங்களையும் இஸ்லாமிய நாடுகளின் விஞ்ஞான விழுமியங்களையும் சுமந்து செல்கிறது.
ஒரு சிறு மோட்டார் காரை ஒத்த அளவினதான இந்த கலத்தில் இரண்டு solar panel கள் பொருத்தப்பட்டுள்ளன. இது இரண்டு வருடங்கள் செவ்வாயின் வெளிவீதியில் சுழன்று அதன் வளிமண்டலம், காலநிலை என்பவற்றைப்பதிவு செய்யும். ஜப்பானில் Tanegashima என்ற தீவில் இருந்து இது ஏவப்பட்டது.
நாளாந்தர அடிப்படையிலும் பருவகாலங்களின் அடிப்படையிலும் செவ்வாயின் வளிமண்டலம் பெருமளவில் மாற்றமடைவதற்கான காரணங்களை ஆய்வதில் Hope orbiter பெருங்கவனஞ் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று நாடுகளின் விண்கலங்களும் செவ்வாய் பற்றிய புதிய தகவல்களை நமக்கு எடுத்துவரும் என்று எதிர்பார்க்கலாம். அப்படித்தானே?
ஆம். செவ்வாய்க்கிரகம் தொடர்ந்தும் விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராகவும் மனித அறிவுக்கும் நமது தொழில் நுட்பத்திற்கும் பெரிய சவாலாகவே பார்க்கப் படுகிறது. தற்போது அனுப்பப் படும் விண்கலங்கள் தகவல்களையும் samples என்ற மாதிரிகளையும் அனுப்ப சில வருடங்கள் எடுக்கும் என்றபோதும் அவை பயனுள்ள தரவுகளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
