Oxford பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்டுவந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவியரீதியில் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இத்தடுப்பு மருந்து பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்ட ஒருவருக்கு பாரதூரமான reaction-பின்விளைவு ஏற்பட்டுள்ளதால், இச்சோதனை முயற்சி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு குறித்த பின்விளைவுக்கான காரணம் தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டனின் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான AstraZeneca-உடன் இணைந்து Oxford பல்கலைக்கழகம் இத்தடுப்பு மருந்தினைத் தயாரித்துவருகிறது.
மனிதர்களில் கட்டம் கட்டமாக பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ள இத்தடுப்புமருந்து வெற்றியளித்தால் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தடுப்புமருந்து பரிசோதனையின்போது இவ்வாறான பின்விளைவுகள் ஏற்படுவது எதிர்பார்க்கக்கூடிய ஒன்று எனவும், குறித்த நபருக்கு ஏற்பட்ட பின்விளைவுக்கு காரணம் கொரோனா தடுப்புமருந்தா அல்லது வேறு ஏதாவது மருத்துவ காணங்களா என்பது இன்னமும் தெரியவரவில்லை எனவும் AstraZeneca கூறியுள்ளது.
இந்த தடுப்புமருந்தை பெற்றுக்கொள்வதற்கான பல மில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தமொன்று AstraZeneca நிறுவனத்திற்கும் ஆஸ்திரேலிய அரசுக்குமிடையில் எட்டப்பட்டிருந்தது.
தடுப்புமருந்து பரிசோதனை பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமையானது இத்தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக அர்த்தமல்ல என்றும், சோதனையில் பங்கேற்றவருக்கு ஏற்பட்ட பின்விளைவு தொடர்பில் ஆய்வு நடத்தப்படுவது அவசியம் எனவும் ஆஸ்திரேலிய துணை தலைமை மருத்துவ அதிகாரி Nick Coatsworth தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
